book

எடிட்டர் எஸ்.ஏ.பி

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Add to Cart

காந்தியடிகள் காலமானபோது ஐன்ஸ்டைன் சொன்னார்: "இப்படி ஒரு மனிதர் நரம்பும் சதையும் ரத்தமும் கொண்டு இந்தப் பூமியில் நடமாடினார் என்பதைப் பிற்கால சந்ததிகள் நம்ப மறுப்பார்கள்."எடிட்டரைப் பற்றி நாங்கள் கட்டுரை எழுதக் காரணமும் இதுவே.இப்படி ஒரு லட்சிய வெறி கொண்ட எடிட்டர், கொள்கைப் பிடிப்புள்ள பத்திரிகையாசிரியர், தமிழ்ப் பற்றும் தேசப் பற்றும் தெய்வப் பற்றும் மிகுந்த மாமனிதர், நம்பற்கரிய புத்தி வீச்சுக் கொண்டிருந்த அறிவாளி, சகல விதமான கலைகளையும் துய்த்து மகிழ்ந்த ரசிகர், தனக்குத் தெரிந்த தொழில் ரகசியங்களைத் தன் கீழுள்ள அனைவரும் கற்றுக் கொள்வது லாபமே தவிர நஷ்டமாகாது என்று நம்பிய பெருந்தன்மையாளர் -

நரம்பும் சதையும் ரத்தமும் கொண்டவராக இந்தத் தமிழ் நாட்டில் நடமாடினார் என்பது ரெகார்டாக வேண்டும் - எழுத்திலே பதிவு பெற வேண்டும் - என்பது எங்கள் ஆசை. காந்திஜிக்காவது ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தன. அவருடைய பெருமைகளைப் பறைசாற்ற. தன் வாழ்க்கையில் சத்தியத்துக்கு ஏற்பட்ட சோதனைகளை அவரே சுயசரிதமாக எழுதினார்.எங்கள் எடிட்டருக்கு அப்படி எதுவும் இல்லை. உயிருடன் இருந்த வரையில் தன்னைப் பற்றி ஒரு வரியோ, தபால்தலை அளவுக்குப் புகைப்படமோ வெளிவர அவர் அனுமதித்தது கிடையாது. ஆகையால் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லாவிட்டால் அது சரித்திரத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகும் என்று நம்பியே இந்தக் கட்டுரைகளை எழுதினோம்.எடிட்டர் காலமான செய்தி கிடைத்த தினத்தன்றே, நான் அவரைப் பற்றி எழுத வேண்டுமென்று ஆனந்த விகடன் ஆசிரியரவர்கள் பணித்தார். மாற்றார் பத்திரிகைக்கு விளம்பரம் தருவதாக இருக்குமே என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், என் மனத்தில் பட்டதைத் தொடர்ந்து எழுத இடம் கொடுத்தார். அந்த விசால இதயத்துக்கு என் நன்றி.நாங்கள், நாங்கள் என்று பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதால், ஜ. ரா. சுந்தரேசன், புனிதன் ஆகியோர் எழுதிய கட்டுரைகளையும் இப்புத்தகத்தில் இணைப்பது பொருத்தமாகத் தோன்றியது. அந்தக் கட்டுரைகளை வெளியிட்ட கலைமகள், தினமலர், தினமணி கதிர், குங்குமம், மேகலா இதழ்களுக்கு நன்றி.எடிட்டர் எங்களை எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளர்களாகவும் பண்ணியதோடு மட்டுமில்லை. காந்திஜியைப் பற்றிய டி. எஃப். கராக்கா எழுதியது போல, 'He made men out of dust'. சீரிய, எளிய வாழ்க்கையைத் தானே வாழ்ந்து காட்டி முன்னுதாரணமாக அவர் திகழ்ந்ததால், நாங்களும் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தறிகெட்டுப் போகாதவர்களாக உருவானோம். பதப்படுத்தக்கூடிய இளம் வயதில் அவர் எங்களுக்குக் குருவாக அமைந்திருக்காவிட்டால் யார் எப்படிப் போயிருப்போமோ சொல்ல முடியாது. எங்களிடம் எந்த நல்ல குணமேனும் காணப்பட்டால் அது அவர் மூலம் வந்ததாகும். எந்தக் கெட்ட குணமேனும் காணப்பட்டால் அது நாங்களாக ஈட்டிக் கொண்டதாகும்.