book

படகு வீடு

₹410+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :மனோ பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :647
பதிப்பு :1
Add to Cart

சிறுவயதிலிருந்தே காஷ்மீரத்துடன் ஒரு தொந்தம் இருந்திருக்குமோ?
 
வயலெட் மசியில், அப்பாவின் உருண்டு திரண்ட கையெழுத்தில், ரூல்போட்ட நோட்டுப் புத்தகங்களில் வாசித்தது. இப்போதும் நினைவிருக்கிறது. தந்தையார் வடமொழியில் மேதை. மகாமகோபாத்தியாயர். காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் 'ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூலைத் தமிழாக்கம் செய்து அந்த நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைத்திருந்தார்.    
 
அந்தக் கையெழுத்துப் பிரதி கடைசிவரையில் அச்சு யந்திரத்தைப் பாராமலே இருந்துவிட்டது. எனினும், இலக்கிய உணர்வும் கதை எழுதும் ஆசையும் வித்திட்டிருந்த அந்தச் சிறு பிராயத்தில், அவற்றைப் பயிர்ப்பித்த முதல் மழை அதுவே என்று கருதுகிறேன்.
 
ஆண்டவனின் அருளை என்ன சொல்ல? 
 
'ராஜதரங்கினி'யைப்  படித்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த மன்னர்கள் கீர்த்தியுடன் கோலோச்சிய பூமியைக் கண்ணாரவே காணுகின்ற பேரு கிட்டியது. ஆனால் கல்ஹண கவிக்கும், கரன்ஸிங் மன்னருக்குமிடையே எத்தனை நூற்றாண்டுகள் கால வெள்ளத்தில் உருண்டு விட்டன! தர்பாரின் படாடோபம் இப்போது தென்படவில்லை; மாறாக, மக்களின் எளிய உள்ளம்தான் தெரிகிறது. மகுடங்களின் நவரத்தின ஜொலிப்பைக் காட்டிலும் அதிதியை விருந்தோம்பும் பண்பு எத்தனை மடங்கு அழகானது என்ற உண்மை புரிகிறது. அரசகுலத்தின் பலவீனமான நளினத்தை அங்கே கண்டேனில்லை; உழைப்பினால் புனிதம் பெட்ரா முரட்டுத்தனத்தையே தரிசித்தேன்.
 
ஒரு வார காலம், தால் ஏரியில், படகு வீட்டில் தங்க வைத்து உபசரித்து, காஷ்மீரத்தின் எழிற் கொள்ளையை மாந்துவதற்கான வசதிகளைச் செய்து தந்தார்கள் ஜம்மு - காஷ்மீர் அரசாங்கத்தினர். உல்லாச யாத்ரிரீகர்களை அங்கே செல்லத் தூண்டும் விதத்தில் பத்திரிகையாளர்கள் எழுத வேண்டுமென்பது அவர்கள் விருப்பம். அந்தப் பிரசாரம் பச்சையாக அமைந்துவிடக் கூடாதென்றும் கவலைப்பட்டார்கள். அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், காஷ்மீரத்தைப் பின்னணியில் வைத்து ஒரு நாவல் எழுதுவதே நல்ல வழி என்று குமுதம் ஆசிரியரவர்கள் பணித்ததன் பேரில் இதை எழுதத் துணிந்தேன்.
 
பூவையும், நீரையும் பொருளாதாரமாகக் கொண்டு இயங்கும் ஒரே இந்திய ராஜ்யம் காஷ்மீரமாகத்தான் இருக்க முடியும். அடுக்கடுக்காக வானை மறைக்கும் தொழிற்கூடமோ, மூட்டை மூட்டையாக நிலத்தை மறைக்கும் விவசாயமோ ஏற்பட முடியாத அந்த இடத்தில், உல்லாசப் பயணிகளின் கையை எதிர்பார்த்தே மக்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. எனவே, இந்த நாவலைப் படிப்பதனால் உந்தப்பட்டு, வசதி படைத்த ஒரு பத்துப் பேராவது காஷ்மீருக்குச் சென்று மனமோகனமான அந்தப் படகு வீடுகளில் பத்து நாளேனும் தங்குவார்களானால், காஷ்மீர அரசாங்கம் செய்த உபசரிப்புக்குக் கைம்மாறு செய்த திருப்தியை அடைவேன்.