book

திரு அருட்பா எளிய உரை (ஆறாம் திருமுறை) தொகுதி 2 (கெட்டி அட்டை )

Thiru Arutpa Eliya Urai (Aaram Thirumurai) Thoguthi 2 (Hardcover)

₹550
எழுத்தாளர் :அடியன் மணிவாசகன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :1122
பதிப்பு :1
ISBN :9788183796514
Add to Cart

கடவுள் ஒருவரே. அவரை அன்பால், ஒளி வடிவில் வழிபட வேண்டும்; இறைவனை நோக்கிச் செல்ல பல வழிகள் இருப்பினும் ஆன்மீகமே மிகச் சிறந்த வழி;  இறைவனை ஆத்மார்த்தமாக உணர, சுத்த சன்மார்க்கமே மிகச் சிறந்த வழி; எல்லா உயிர்களும் இன்பத்துடன் வாழ வேண்டும்; ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்; என்று கூறிய திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும், இராமலிங்க அடிகளாரின் "திருவருட்பா"வின் ஆறாம் திருமுறையை, எளிய முறையிலும், அனைவருக்கும் புரியும் வகையிலும், 26 தலைப்புகளில் தொகுத்து வழங்கியுள்ள இந்நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
 
"திருஅருட்பா ஆறாம் திருமுறை உட்பொருள் திரட்டு" என்ற இந்நூலின் மூலம், ஆசிரியர் அவர்கள், மிகுந்த சிரமம் கொண்டு, பற்பல நூல்களை ஆராய்ந்து, பல ஆயிரம் பாடல்களை மேற்கோள்கட்டி, வருங்கால தலைமுறையினரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வருந்தி பாடிய, இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா ஆறாம் திருமுறைக்கு விளக்கமளித்துள்ளார்.
 
இந்நூலின் மூலம் வள்ளலார் அவர்கள், விண்ணிலிருந்து மண்ணிற்கு இறைவனால் அனுப்பப்பட்டவர் என்றும், அவரிடம் சிவபெருமான் குடிகொண்டிருப்பதாகவும், அவருடைய அருட்பாடல்கள் மக்களிடையே, அன்பு, பாசம், நேசம், கருணை, ஒழுக்கம், ஆன்மிகம் போன்ற உயரிய பண்புகள் வளர்த்து, தங்கள் வாழ்வில் இறைவனின் அருள் பெற்று, மேன்மேலும் சிறந்து விளங்க வழிவகுக்கும், என்பதை ஆசிரியர் அவர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
 
மேலும், திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமே, சிவபெருமான் இராமலிங்க அடிகளாருக்கு சன்மார்க்கத்தை கற்பித்தார் என்றும், இராமலிங்க அடிகளார் அவர்களின் "சிவசன்மார்க்கம்" என்பது. சிவ தத்துவத்தின் தோற்றமான ஜோதி சொரூபத்தைக் கண்டு, ஆங்காரத்தை அடக்கி, சித்தராய் தவம் செய்து, எமனை வெல்லும் மார்க்கமாகும்; அதாவது, மரணத்தை வென்று பேரின்பம் பெரும் சன்மார்க்கமாகும் என்பதை ஆசிரியர் எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறார்.
 
வேதங்களின் அடிப்படையில் அமைந்ததுதான் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா என்றும், இல்லறத்தில் இருந்து கொண்டே பரம்பொருளை காணலாம் என்னும் வேதத்தின் கூற்றையே, இராமலிங்க அடிகளாரும் தன்வாழ்வில் பின்பற்றினார் என்றும், சிவபெருமானே இராமலிங்க அடிகளாருக்கு முக்தி பெற்று ஞானமார்க்கத்தை அடையும் கல்வியினை போதித்தார் என்றும், இந்நூலில் ஆசிரியர் ஆதாரத்தோடு எடுத்துரைக்கிறார்.
 
"ஆறாம் திருமுறை கூறும் இறை விளக்கம்" என்னும் தலைப்பில், இறைவன் ஒருவரே, அவரே அருட்பெருஞ்சோதி என்றும், இறைவனை சிந்திக்கும் முறை 'பக்தி' என்றும், உயிர்க்கொலையும், புலால் உண்ணலும் செய்பவர்களுக்கு ஞான மார்க்கத்தைப் பற்றிய விளக்கங்களை கூறலாகாது என்றும், வள்ளலார் உலக மக்களுக்கு உணர்த்திய பாடல்களில் குறிப்பிடத்தக்கது. "மரணம் இலாப் பெருவாழ்வு" என்றும், ஆசிரியர் தனக்கே உரிய முறையில் சான்றுடன் விளக்குகிறார்.
 
இவ்வாறாக, இராமலிங்க அடிகளார் பற்றியும் அவருடைய சீரிய கருத்துக்களையும், ஆசிரியர் அவர்கள் ஆராய்ந்து விளக்கியுள்ள இந்நூல் அனைத்து மக்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அரிய படைப்பாகும். இப்படைப்பினை நமக்கு அளித்த ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.