book

சாதனை புரியத் தயாரா (சுயமுன்னேற்றக் கட்டுரைகள்)

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கெ. செல்லத்தாய்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :52
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193713181
Add to Cart

நாம் செய்கின்ற பணியில் ஈடுபாட்டை, உழைப்பை, முயற்சியை, புதுமையை, உண்மையை, நேர்மையை, அன்பை, வாய்மையை கலக்கிற போது அது கலப்படம் செய்யாத துாய பணியாக மலர்கிறது. அப்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. நம்மை செம்மையாக்குகிறது. நமக்கு நேர்த்தி கூடுகிறது. முகத்தில் அழகு மிளிர்கிறது என்று கூடச் சொல்லலாம்.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பர்; கல்வி என்னும் படிப்பில் கடவுளைக் காணலாம்; கல்விக் கடலில் நீந்தி கரை காணமுடியாது; ஆனால் மூழ்கி, மூழ்கி நாம் முத்தெடுக்கலாம்.உழைப்பு என்பது வெற்றியின் விதை. எதையும் போராடித்தான் பெற முடியும். எதற்கும் போராடுவது வீரத்தின் இலக்கணம். வெற்றி என்பது நம் காலடி மண்ணும் இல்லை. உயரத் தெரிகின்ற விண்ணுமில்லை. அது நம் கையில்தவழும் பொக்கிஷம்.
உழைப்பதும், சோம்பலும் : எதிர் எதிர் வினைகள். சோம்பல் என்பது தோல்வியின் விதை. அதைத் துாக்கித் துார எறிந்து விட வேண்டும். நம் கரங்களை உடல் உறுப்பாகப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் வெற்றியை வெகு துாரத்திற்கு விரட்டி விடும். எப்பொழுதும் நம் கரங்களை உழைப்பின் மூலதனமாகக் கொள்ள வேண்டும்.
நம் திறமை : ஒருவன், மன்னனிடம் சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். 'முதலில் எனக்கு பத்தாயிரம் கொடுங்கள்' என்று கேட்டானாம். அதற்கு மன்னன் 'பத்தாயிரம் என்ன? இருபதாயிரம் கொடுக்கிறேன். உன் வலது கை பெருவிரல் ஒன்றை மட்டும் வெட்டிக் கொடு' என்றாராம். பணம் கேட்டவன் திகைத்துப் போனான்.'ஐயா! என்ன இப்படிக் கேட்கிறீர்கள்''ஆம்; உன் கையில் பத்து விரல்கள் எனும் மூலதனத்தை வைத்து நீ எவ்வளவோ சம்பாதிக்கலாம்; சாதிக்கலாம்' என்றாராம் மன்னர். உண்மைதானே. நம் திறமை நமக்குத் தெரிவதில்லை. முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.வேர்களை இழந்துவிட்டு விழுதுகளின் பலத்தில், நிழல் தேடும் சமூகமாய் மாறக்கூடாது. உறுதியுடன் மலையில் உயர்ந்து நிற்கும் சந்தனமரம் போல புகழ் மணம் பரப்புவதற்கு நீங்கள் இப்பொழுதே தயாராக வேண்டும். மனம் கசந்து போகாமல், வாழ்க்கையின் மகத்தான இன்பத்தை அனுபவிக்க நினைத்தால், அதற்கேற்ப உழைக்க வேண்டும்.
புத்தகப் புழுக்களாய் இல்லாமல், பரந்து பட்ட உலகில், சுதந்திரமாய் சுற்றித் திரியும், சிட்டுக்குருவிகளைப் போல சிறகடித்துப் பறக்க வேண்டும். செடியில் முள்ளாக இருக்கிறது என்பதற்காக மென்மையான ரோஜாப்பூ, மலராமல் இருப்பதில்லை. செடியில் முள்ளிருப்பது அதன் குணம். அச்செடியில் பூவாக மலர்வது பூவின் குணம். அது போல நம் குணம் என்ன? ஏற்றுக் கொண்ட வேலையை இதயபூர்வமாக நினைத்துச் செய்வது.
நீங்கள் எந்த கல் : உளியின் வலியை பொறுமையாகக் கல் தாங்கிக் கொண்டதால், அனைவரும் வணங்கும் கடவுள் சிலையாக உள்ளது. மற்றொரு கல்லோ உளியின் வலியைத் தாங்க முடியாது உடைந்து விட்டதால் பலரும் மிதித்துச் செல்லும் படிக் கல்லாக போகின்றது.இதில் நீங்கள் எந்தக் கல் என்பதனை இப்பொழுதே உறுதி செய்து கொள்ளுங்கள். வேடிக்கை மனிதர்களாக இல்லாமல், நம்மைக் கோடிக்கை கும்பிடும்படியாகச் சாதனை புரியத் தயாராக வேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை கண்ணை மூடிக் கொண்டு கிணற்றில் விழுவதைப் போன்றது.
நமக்குள் இருக்கிறது : சொர்க்கமும், நரகமும், கடந்த காலம் நடந்து முடிந்த காலம், நிகழ் காலம் நல்ல மகிழ்வான காலம், அதை அழகாக மாற்றிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. எதிர்காலம், அது ஒரு புதிரான காலம், அதை புதுமைப்படுத்த இப்பொழுதே புறப்பட வேண்டும். மண்ணுள் புதைகிற நாள் வரை நாம் சோம்பேறியாய் வாழ்வதில் சுகமென்ன இருக்கிறது. வாழும் காலம் வரை, வெற்றி நமக்குக் கிட்டும் வரை கைகளைக் கருவியாக்குவோம். நம் வெற்றியை உறுதியாக்குவோம். உன்னை நீயே நம்பு, அதுவே நீ ஊன்றிப் பிடிக்கும் கொம்பு, எப்பொழுதும் அதை மனதில் வை... வரும் தெம்பு; வாழ்க்கைக்கு உருப்படாதவற்றை உதறித் தள்ளிவிட்டு, சிந்தனையை செம்மையாக்குங்கள்.
பெற்றோர்களுக்கு : ஈடுபாடு இல்லாத எந்த செயலும் சிறப்பாக இருக்காது. அன்பு பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அன்பாகப் பேசி; அரவணையுங்கள். அதிக மதிப்பெண் தான் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது எனும் தவறான எண்ணத்தைக் கைவிடுங்கள். குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுங்கள், நம் பண்பாட்டைப் பின்பற்றச் சொல்லுங்கள், பாரதம் போற்றும் பெருமகனாக வருவர். பிறரிடம் அன்பாகப் பழகச் சொல்லுங்கள். அவனியை ஆளக் கற்றுக்கொள்வார்கள். நமக்கு ஒழுக்கம் என்பது உயிர் போன்றது. இழுக்கு நேராமல் வாழச்சொல்லுங்கள். எதற்கும் தர்க்கம் செய்யக் கூடாது. நம் கலாசாரத்தைப் பின்பற்றுவது, கடவுளை வணங்குவதற்குச் சமம். கண்டுகளிக்கும் காட்சிப் பொருளல்ல, கல்வி. அதைமாட்சிமையுடன் மரியாதையுடன் கற்றுத் தெளிதல் சிறப்பு. ரைட் சகோதரர்கள், எடிசன், காமராஜர் இவர்கள் போன்று எத்தனையோ பெரியோர்கள். பள்ளிப் படிப்பைத்தாண்டாதவர்கள். உலகம் போற்றும் தலைவர்களாக இன்றும் போற்றப்படுகிறார்கள்.
மாணவர்களுக்கு : மாணவர்களே... நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். மனம் தளரக் கூடாது. வெற்றியை அடைய விவேகத்தோடு செயல்படுங்கள். உடன்பாட்டுச் சிந்தனையுடன் நாம் இருந்தால் வெற்றி நமக்கு வசமாகும். அச்சத்தை துச்சமாகத் துாக்கி எறிவோம். பயம் அது நம் வயம் கூடாது. 'உழுகிற காலத்தில் ஊரைச் சுற்றி விட்டு, அறுவடை காலத்தில் ஐயோ! அம்மா என்று கூப்பாடு போட்ட கதையாக' நாம் படிக்கிற காலத்தில் படிக்காமல் அரட்டை அடித்துவிட்டு; பின் தேர்வில் சரியாக மதிப்பெண் வாங்கவில்லையே என்று கவலைப் படக்கூடாது. வாழ்க்கையில் வெற்றி அடைய நல்ல மனநிலையே தேவை. நல்ல மனநிலையோடு படிக்கும் போது அதன் பலன் கிடைக்கும். இவ்வுலகில் மனிதனுடைய அறிவைப் போன்று சிறந்த ஆற்றல் மிக்கது எதுவும் இல்லை. திருவள்ளுவரும் 'அறிவு அற்றம் காக்கும் கருவி” என்கிறார். அறிவினுடைய ஆற்றலைக் கொண்டு நாம் வெற்றி பெற முடியும். 'அறிவு ஓர் ஆற்றல் மிக்க டைனமோ. அதில் மிகப்பெரிய சக்தி புதைந்து கிடக்கிறது” என்கிறார் ஆர்னால்டு ஷீவர்சனோகர் என்ற அறிஞர். உங்கள் அறிவை பயன்படுத்துங்கள். எதிர்காலம் என்றும் ஒளிமயமாக இருக்கும்.