இனிமையான சிறுவர் கதைகள் ; மனிதன் தன்னிடம் இருக்கும் மனத்தோடு பேசவிரும்பாதவனாக, ஆசைப்பட்டதை அடைய மிருகம்போலவே செயல்பட்டுவருகிறான். மனிதன் தனது உள்மனத்துடன் பேசினால் வரம்பு தப்பிப் போகாமல் வாழ்க்கையை ஒரு கட்டுக்குள் அமைத்துக்கொள்ள இயலும். உழைப்பை உறிஞ்சுதல் , கொள்ளை லாபம் , அதிக வாடகை , அதிக வட்டி என்று எப்போதும் பணத்தைக் குவித்து மேடையாக்கி அதில் ஆட்டம் போடுவதற்கே துணிந்துநிற்கிறான். அவ்வாறு இல்லாமல் அன்பால் மேடை அமைத்து , சிறுவர்களுக்கு அன்பால் மேடை கட்டும் வழிமுறைகளைச் சொல்லிக்கொடுக்க முன்வர வேண்டும்.இ னிப்பால் மருந்தை ஊட்டுவதுபோல் இனிமையான சிறுவர்கதைகள் என்னும் இந்நூல் எளிமையாகச் சிறுவர்களின் உள்ளங்களில் பதியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் எஸ். புனிதவள்ளி அவர்கள் சிறப்பாகக் கதைகளை வடிவமைத்துள்ளார். ஓவியர் பாலாஜி அவர்களின் கைவண்ணத்தில் வரைந்த விளக்கப்படங்கள் சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கும். பாட்டிகளும் தாத்தாக்களும் கதைகள் சொல்லி வளர்த்த காலத்தில் குழந்தைகளிடம் அன்பும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தது. தொலைக்காட்சி முன்பு உட்காரும் குழந்தைகள் வன்முறையில் ஈடுபடுவதை விரும்புகிறார்கள். அறிவுரைகளை விரும்பவில்லை . அதை மாற்ற வேண்டுமென்றால் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கதைகள் வாயிலாக நல்லனவற்றைச் சொல்லித் தரவேண்டும் . அதற்கு இந்தப் புத்தகம் மிகுந்த துணைபுரியும்.
- பதிப்பகத்தார்.