கவியரசு கண்ணதாசன் தமிழ்த் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களே கண்ணதாசனின் கவிதைகளில் வெளிப்படும்.மனதைப் பாதித்த சம்பவங்கள் பாடலாக வெளிவரும்போது அடிமனதில் ஆழப்பதிந்துவிடுவது உண்மையே. கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்களில் பல அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவானவையே. "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் வரும் "சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே" என்ற பாடல் வரிகள் கேட்பவரின் மனதை உருகச்செய்பவை. தான் இறக்கப்போவதைத் தெரிந்துகொண்ட கதாநாயகன் தான் இறந்த பின்னர் திருமணம் செய்யும்படி மனைவியிடம் கூறுகிறான்.அப்போது கதாநாயகி தனது மனதில் உள்ள ஆதங்கத்தைப் பாடலாக வெளிப்படுத்துகிறாள்.