இவர் எழுதிய தாகம், சர்க்கரை, பவளாயி ஆகிய புதினங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. சங்கம் என்கிற புதினம் ஆங்கிலம் தவிர இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலுக்கு 1986 இல் இலக்கியச் சிந்தனை விருது கிடைத்தது. இவரது ஆறு நாவல்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவர் எழுதிய சுரங்கம் என்ற புதினம் நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட வர்க்கப் போராட்ட நாவல் ஆகும். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் இப்புதினத்தை சின்னப்ப பாரதி எழுதினார். இப்புதினம் உபாலி நாணயக்காரவின் மொழிபெயர்ப்பில் சிங்களத்தில் வெளியாகியுள்ளது.