பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து
உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், சமையல் பொடி
போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவற்றில் தான் பெண்கள்
கவனம் செலுத்துவார்கள். இதைத்தான் சுய தொழிலாக பெருமையாக கருதுவார்கள்.
இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன.
இந்தியாவில் ஏராளமான பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுயதொழில்
தொடங்கி இன்றைக்கு பெரும் தொழில் அதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கள். எனவே
பெண்கள் வேலைக்கு செல்லத்தான் தகுதியானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்
கொள்ளக் கூடாது. சுயதொழில் செய்து ஆண்களை போல பெண்களாலும் தொழில் அதிபராக
உயர்ந்து சமூக அந்தஸ்தை பெற முடியும்.
சுய தொழிலில் ஈடுபட நினைக்கும் பெண்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது
மிக அவசியம். நமது சமூகம் ஆணாதிக்க சமூகமாக திகழ்வதால் பல்வேறு இடர்பாடுகளை
பெண்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த இடர்பாடுகளை எல்லாம்
தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.