மருத்துவர் மாணிக்கவாசகம், மதுரை மருத்துவக் கல்லூரியில் மயக்க இயல் துறையில் (Anaesthesiology) முது கலை பட்டம் பெற்றவர். முப்பது வருடங்களுக்கும் மேலாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி, ஓய்வு பெற்று, தற்போது மயக்க இயல் துறை ஆலோசகராக பல்வேறு மருத்துவமனைகளில் செயலாற்றி வருகிறார். அறுவை அரங்கம் ஒரு தனி உலகம். வலியும் பயமும் எழுதி ஒட்டிய முகங்களுடன் வரும் நோயாளிகளை, பல்வேறு மயக்கமருந்துகள் மூலம் தூக்கத்தில் ஆழ்த்தி, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மறுபடியும் தெளிந்த நிலைக்கு கொண்டு வருவது ஒரு தனிக்கலை. முப்பத்தைந்து வருட மயக்க மருத்துவ அனுபவங்கள் நினைவுச் சருகுகளாக அடுக்கு அடுக்காக குவிந்திருக்க, சருகுகளைக் கிளறிக் கிளறி எழுந்த எண்ணங்களின் எழுத்து வடிவமிது.