6 சிறுகதைகளை மட்டும் கொண்ட இந்த 84 பக்கங்கள் அடங்கிய இந்த நூல் பற்றி நான் எழுத ஆரம்பிக்கும் போதே என்னுள் ஏதோ உறைத்தது. பல வருடங்களுக்கு முன்பு சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் வெளிவந்த போது ‘பதிவுகள்’ இணையத்தளத்தில் ஒரு சிறு குறிப்பொன்றினை எழுதியிருந்தேன். அந்த குறிப்பின் ஆரம்பத்தில் பின்வருமாறு எழுதியிருந்தேன். “இன்றைய நவீனதமிழ் இலக்கிய உலகில் சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. ‘அர்த்தம்’ சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ‘ஆறாவடு’ நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன் கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது”. இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு தவறான தகவலை இதனை வாசித்தவர்களிடம் பகிர்ந்து கொண்டதற்காக மனம் மிகவும் வருந்தியது. நான் அதில் எழுதியது போல் இந்தச் சிறுகதைகள் ஆனது தமிழ்த்தேசியத்தின் அல்லது விடுதலைப்புலிகளின் பிரச்சார ஊது குழழ்களாக அமைந்திருக்கவில்லை. மாறாக தம்மீது வலிந்து திணிக்கப்பட்ட போரை எதிர்கொண்ட மக்களின் போராட்ட வாழ்வினையும், அவ்வாழ்வில் அவர்கள் எதிர்கொண்ட வலிகளையும் துயரங்களையும் கூடவே அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் வெற்றியை நோக்கிய அவர்களது கனவுகளையும் குறித்தே இது பேசுகின்றது.