புவிப்பரப்பில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கு கடவுள், மதம், போன்ற கற்பிதங்கள் தேவைப்படவில்லை. ஆறறிவு படைத்த மனிதன் வாழ்வதற்கு பிற அனைத்தையும் விட கற்பிதங்களே அதிகமாக தேவைப்படுகிறது. இந்த கற்பிதங்களால் ஏற்கனவே கோடிக்கணக்கானோர் அழிக்கப்பட்டு விட்டார்கள். கோடிக்கணக்கானோர் அழிவின் விளிம்பில் இருந்து வருகிறார்கள். அவர்கள் காப்பாற்றப்படுவதும், காப்பாற்றப்படாததும் மக்கள் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. இந்த கற்பிதங்கள் ஆளும் வர்க்க நலனை பாதுகாக்கின்ற கேடயமாக இருப்பதால் ஆளுகின்றவர்கள் அதனைப் பேணி பாதுகாத்து வருகின்றனர். இதனை புரிந்து கொள்ளாத மக்கள் அவர்களுக்கு துணை போகின்றனர். நாம் வாழ்வது அறிவியல் உலகில். அறிவியலின் வளர்ச்சி உலகையும் கடந்து வெவ்வேறு கிரகங்களை சென்றடைந்து விட்டது. ஆனாலும் மூட நம்பிக்கை களின் அடிப்படையில் உருவான கற்பிதங்களின் ஆதிக்கம் குறைவதற்கு பதிலாக அதிகரித்து வருகிறது.