தோட்டத்தின் தோற்றம் முற்றிலும் மாறிவிட்டிருந்தது..லயங்களைச் சுற்றிலும் பாக்கார் (முள்கம்பி) வேலி இரண்டு ஆள் உயரத்தில் நின்றது. அதை உராய்ந்து போகும் எதையும் கிழித்துப் பிளந்துவிடும் கூர்மையான முட்கள் வேலிக்கம்பி முழுக்க நிறைந்திருந்தன. பத்தடிக்கு ஒரு இரும்புத்தூண் என நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கம்பிகளை இணைத்துப் பிடித்திருந்தன. பூனைகள், நாய்கள் உடலைக் குறுக்கி நுழைவதற்கும் இடைவெளி இல்லாத நெருக்கம். லயங்களுக்குள் நுழைவதற்கான பிரதான வாயிலில் முகப்பு வளைவுடன் ஒரு இரும்புக்கதவு.