இந்திய மொழிகளில் உள்ள நாடக முயற்சிகளையெல்லாம் தொகுத்து ஒரே நூலாக தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் அவர் மனம் தீவிரமாக ஈடுபட்டது. ஏறத்தாழ இரண்டாண்டுகள் அதற்காகவே அவர் இடைவிடாமல் உழைத்தார். பதினாறுக்கும் மேற்பட்ட நாடகங்கள், ஏறத்தாழ எண்ணூறு பக்கங்களையும் தாண்டும் அளவுக்கு அது பெரிய அளவில் இருந்தது. பதிப்பாசிரியர் அவ்வளவு பெரிய நூலை வெளியிட மிகவும் தயக்கம் காட்டினார். அதனால் வடநாட்டு மொழிகளின் நாடகங்கள், தென்னாட்டு மொழிகளின் நாடகங்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரித்துத் தொகுக்கலாம் என இறுதியில் முடிவெடுத்தார். வடநாட்டு மொழிகளின் நாடகங்களை இந்தி வழியாக அவர் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பது என்றும் தென்னாட்டு மொழிகளின் நாடகங்களை, அந்தந்த மொழி தெரிந்த நண்பர்களைக் கொண்டு மொழிபெயர்க்க வைத்துத் தொகுப்பது என்றும் அவர் திட்டமிட்டார். கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கும் பொறுப்பை நானும் மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கும் பொறுப்பை ஜெயமோகனும் தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கும் பொறுப்பை சாந்தா தத்தும் ஏற்றுக்கொண்டோம். அந்தத் திட்டம்தான் என்னை ஒரு மொழி பெயர்ப்பாளனாக்கியது. துர்திருஷ்டவசமாக இந்தத் தொகுப்பு வெளிவரவில்லை. வடமொழி நாடகங்கள் மட்டுமே வெளிவந்து அவருக்கு சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதைப் பெற்றுத் தந்தது.