அது இனிமையான ஓர் இரவு: அருமை வாசகரே, இளம் வயதில் மட்டுமே நாம் அறியக்கூடிய ஓர் இரவு வானத்தில் அப்படி விண்மீன்கள் நிறைந்திருந்தன. அவ்வளவு நிர்மலமாக ஒளிர்ந்தது வானம். அதைப் பார்க்கையில் இப்படிப்பட்ட ஒரு வானத்தின்கீழ் பலவகையான முசுடுகளும் மூர்க்கர்களும் எப்படி வாழ முடிகிறது என்கிற கேள்வி நிச்சயம் உங்கள் மனதில் எழவே செய்யும். இந்தக் கேள்வியுங் கூட இளம் வயதுக்குரியதுதான்; அருமை வாசகரே மிகமிக இளம் வயதுக்குரியதுதான்.