மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார்.[3] மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்[சான்று தேவை]. மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை[சான்று தேவை]. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.