அந்தப் பார்வையில் உக்கிரமோ, கோபமோ... எதுவுமே இல்லை! என்றாலும் வானதியின் உடல் முழுக்க ஒரு பயரேகை உற்பத்தியானது. 'இன்னைக்கு நீ மாட்டினே..' என்பதுபோல் உபேந்திரன் தங்கையை பரிதாபமாய் பார்த்தான். மகாலட்சுமி கூட, அடுத்து வெடிக்கப் போகும் குண்டுக்காக காதைப் பொத்தாமலேயே அதிர்ச்சியாய் தன் மூத்த மகளைப் பார்த்தாள். ஆனால், சூரியா அவர்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள். உடைகளை களைந்துவிட்டு, குமிழைத் திறந்தாள். பூமழையாய் தண்ணீர் சீறிப்பாய... ஐந்து நிமிடம் கண்மூடி நின்றிருந்தாள். மன உளைச்சல்கள் தண்ணீரோடு கலந்து ஓடின. மணி எட்டைத் தாண்டியதும்... வெங்கடேசன் அறையைவிட்டு வெளியே வந்தார்.