பொழுது சாய்ந்துகொண்டிருக்கிறது. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் குறுக்குமறுக்குமாய் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. கு.அழகிரிசாமி அந்த சிமிண்ட் பெஞ்சிலேயே உட்கார்ந்திருக்கிறார். ஸ்டேஷ னுக்கு நேரெதிரே சூரியன் சேம்பழமாய் சிவந்து ஜொலிக்கிறது. அவொனச் சிவப்பு கரிசல் வெளியில் வேகமாய் பாய்ந்து மறைகிறது. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் கதையில் வருகிற ஸ்டேஷன் மாஸ்டரின் பணி நேரம் முடியப் போகிறது. அவரை மாற்ற வரும் பதிலி ஸ்டேஷன் மாஸ்டருக்காகக் காத்திருக்கிறார். அவருக்குத் தான் ஒரு கதைக்குள் வெகுகாலமாய் வாழ்ந்து கொண்டிருப்பது தெரியாது. அந்தக் கதையை எழுதிய மகத்தான எழுத்தாளர் கு.அழகிரிசாமி வெளியே சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருப்பதும் தெரியாது. நடந்து கொண்டிருப்பது கதையா என்றும் தெரியாது. வெளிச்சத்தின் ரேகைகள் மங்கத் தொடங்கு கின்றன. கரும்வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கு.அழகிரிசாமி எழுந்து மெல்ல நடக்கத் தொடங்குகிறார்...