book

கண்ணீரால் காப்போம்

Kanneeral Kaappom

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

வரலாற்றுச் சான்றுகளின் உதவியுடன் புதுவையின் முன்னூறு வருட வரலாற்றை நான்கு பாகங்களாக (மூவாயிரம் பக்கங்கள்) எழுதினார் பிரபஞ்சன்.  அந்த வரலாற்றுத் தொகுப்பின் மூன்றாம் பகுதி தான் 'கண்ணீரால் காப்போம்'.  பிரஞ்சுக் காலனி ஆதிக்கம் புதுச்சேரியில் காலூன்றி  பரிணமித்ததை மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும்   புதினங்கள் அழகாய் சித்தரித்தன.  'கண்ணீரால் காப்போம்',  புதுவையின் விடுதலைப் போரின் தொடக்கக் காலம் (1890 - 1934) பற்றியது.   (பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திடமிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற 1954-ஆம் ஆண்டு வரை நடப்பவை நான்காம் பகுதியில் புனையப்பட்டிருக்கிறது).

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய உன்னதத் தலைவர்கள் பலர், பல்வேறு காலக்கட்டங்களில் புகலிடம் வேண்டி, சிலகாலம் புதுச்சேரியில் தலைமறைவாகத் தங்கிவிட்டுப் போவது வாடிக்கையாக இருந்தது.  பொது எதிரியான ஆங்கிலேயர்களை வெறுத்த பிரெஞ்சு அரசும் அந்தத் தலைவர்களின் வருகையை மறைமுகமாக ஆதரித்தது. புதுவையும் தன் பங்குக்கு மகத்தான மனிதர்களைப் பிரசவித்திருக்கிறது.  மேலும், திலகர், காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் புதுவைக்கு வருகை புரிந்துள்ளனர்.


பழுப்பு நிறத் தோல் கொண்டவர் வழக்கறிஞராகவே இருந்தாலும், வெள்ளையர் இருக்கும் நீதிமன்றத்திற்குள் சப்பாத்து அணிந்து வரக்கூடாது என்பது அப்போதைய நடைமுறை.  அதை எதிர்த்து, பிரான்ஸ் தேசத்து உயர்நீதி மன்றத்தில் வாதாடி, வென்று, ஐரோப்பிய மோஸ்தரில் சப்பாத்துக்களோடு மீண்டும் தலை நிமிர்ந்து நீதிமன்றம் பிரவேசித்தவர்,  தலித்துக்களுக்காகப் போராடிய பொன்னுத்தம்பி பிள்ளை.  இவரோடு  ''ஸ்வராஜ்யம்' லோகமான்ய திலகர்,   வ. வே.சு.  ஐயர்,   வெள்ளைக் கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்,    மகாகவி சுப்ரமண்ய பாரதி,    அரவிந்த கோஷ்,   முதலாம் உலகப் போரின், போது,  சென்னைப் பட்டிணத்தில் குண்டு போட்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்  'எம்டன்'க்குத் துணை அதிகாரியாகப் பணியாற்றிய செண்பகராமன் பிள்ளை,  தமிழக கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த ஹைதர் அலிகான்,    ஆசியாவிலேயே முதன் முதல் ஆலை ஊழியர்களுக்கு ' ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை'  என்ற உரிமையைப் பெற்றுத் தந்த சூத்திரதாரியான மக்கள் தலைவர் வ.சுப்பையா, மோகன் தாஸ் காந்தி,   வாத்தியார் கனக சுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் -  என்று பல உன்னதப் பிறவிகளைக் கடந்த இருபதாம் நூற்றாண்டு தரிசித்திருக்கிறது!  இவர்களனைவரும் இந்தப் புதினத்தில் உயிர்ப்போடு மறு அவதாரம் எடுத்தார்போல் வரலாற்றைத் திரும்பப் படைக்கிறார்கள் ! இப்படி வரலாறும்,  புனைவும் 'எங்கே, எப்படி' இணைந்தது என்று தெரியாத வண்ணம் படைக்கப்பட்டிருப்பது,  சிகரமாய் உயர்ந்து நிற்கும் பிரபஞ்சனின் சிருஷ்டிகரத்திற்குச் சான்று !