book

இறைமறையின் இதயம் யாஸீன் ஸூறா

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788195140053
Add to Cart

அல்லாஹ்வின் புனித வேதமாகிய குர்ஆன் ஷரீபின் 114 அத்தியாயங்களுக்குத் தாயாக (உம்முல் குர்ஆன்) “அல்பாத்திஹா“ என்ற அத்தியாயம் அமைந்திருப்பது போல்-குர்ஆனின் எல்லா அத்தியாயங்களுக்கும், ”இதயம்” (ஃகல்புல்ஃகுர்ஆன்) என்ற தகுதியுடன் “யாஸீன்” என்ற அத்தியாயம் அமைந்துள்ளது. இந்த உண்மையை ஸையிதினா கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். எனவேதான் வேறு எந்த சூறாவுக்கும் தரப்படாத தனிப்பெரும் முக்கியத்துவம், நம் சமுதாய மக்களால் இன்று வரை யாஸீன் சூறாவுக்குத் தரப்பட்டு வருகிறது. இத்தகைய யாஸீன் சூறாவுக்கு, மவ்லவி தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள், 2001 – ஆம் ஆண்டிலேயே “இறை மறையின் இதயம் யாஸீன் சூறா விரிவுரை” என்ற பெயரில் நீண்ட விளக்கவுரை நூல் எழுதியிருந்தார். அந்த நூலை அப்போதே நான் வாங்கிப் படித்தேன். மேலப்பாளையம் பள்ளிவாசலில் வாரந்தோறும் நான் நடத்தி வந்த “தப்ஸீர் வகுப்பு“க்கு இந்த நூல் எனக்கு மிகவும் பயன்பட்டது. இதில் இடம்பெற்றிருந்த விஞ்ஞான விளக்கங்களை தப்ஸீர் வகுப்பில் நான் எடுத்துக் கூறியபோது, அங்கு அமர்ந்திருந்த டாக்டர்கள், இன்ஜினீயர்கள், வழக்கறிஞர்கள் போன்ற பட்டதாரிகள் மிகவும் வியந்தார்கள். அந்த நூலை ஆலிம் கவிஞர் அவர்கள், இப்போது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் அதிகப்படியான விஞ்ஞான விளக்கங்களுடனும், வரலாற்று ஆதாரங்களுடனும், விவாத அலசல்களுடனும் புதிய பதிப்பாகத் தந்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்! 83 ஆயத்துகளைக் கொண்ட யாஸீன் சூறாவை 45 தலைப்புக்களில் உள்ளடக்கிய தேங்கை ஹஜ்ரத் அவர்கள், யாஸீன் சூறாவின் ஆயத்துக்களை விவரிக்கும். பல்வேறு இடங்களில் அந்தந்த ஆயத்துக்களின் கருத்தைத் தாங்கிய நிலையில் குர்ஆனில் இடம்பெற்ற வெவ்வேறு ஆயத்துக்களையும் பொருத்தமாக இணைத்து விளக்கும் விதம் வரவேற்கத்தக்கது. கூட்டில் தேனைக் கொண்டு சேர்க்க தேனீக்கள் ஏராளமான மலர்களில் அமர்ந்து தேனை உறிஞ்சுவதுபோல் தேங்கையார் இந்த விரிவுரையை உருவாக்க ஏராளமான தஃப்ஸீர்களையும், ஹதீஸ் கிதாபுகளையும் மட்டுமல்ல; அறிவியல் நூல்களையும் ஆராய்ச்சி நூல்களையும் , வரலாற்றுச் சுவடுகளையும் நாளிதழ்களையும் பார்வையிட்டு அவை தந்த செய்திகளை அந்தந்த இடங்களில் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறார். யாஸீன் சூறாவில் இடம்பெற்ற சில சொற்களில் அடங்கியிருக்கும் உட்பொருளையும், உவமை நயத்தையும் சொல்லாராய்ச்சிக் கண்ணோட்டத்தில் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேங்கை ஹஜ்ரத் – சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் ஈடுபாடு மிக்கவர் ஆவார். எனவே தான், 45 தலைப்புகளைக் கொண்ட யாஸீன் விரிவுரையின் 12-ஆம் தலைப்பில், “குர்ஆன் ஓதியதற்காகவோ, ஓதிக் கொடுத்ததற்காகவோ கூலி பெறுவது தவறில்லை” – என்ற உண்மையையும், 36 – ஆம் தலைப்பில், “இஸ்லாம் நல்ல கவிதைகளுக்கு எதிரானது அல்ல! எனவே பெருமானார் (ஸல்) அவர்களைப் புகழக்கூடிய புனிதமான கவிதைகளை இஸ்லாம் வரவேற்கிறது“ என்ற உண்மையையும் தேங்கையார், புகாரி ஷரீபின் ஹதீஸ்கள் எண், ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளார். யாஸீன் சூறாவின் இந்த விரிவுரை நூல், தமிழ் தெரிந்த முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் ஆலிம் பெருந்தகைகளுக்கும் மிகவும் நல்ல பயன் தரக்கூடியதாகும். எப்படியென்றால், ஆலிம் அல்லாதவர்களுக்கு இந்நூலின் மூன்றிலிரண்டு பகுதி மார்க்கத்தை எடுத்துப் போதிக்கிறது. ஆலிம்களில் மிகப் பெரும்பான்மையோருக்கு இந்நூலின் மூன்றில் ஒரு பகுதி அறிவியலின் பல்வேறு கிளைகளை எடுத்து விளக்குகிறது. எனவே, இந்த நல்ல நூலை எல்லோரும் வாங்கிப் படித்து பயன்பெறுங்கள். பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், சங்கங்கள் மற்றும் நூலகங்களுக்கும் இந்நூலை வாங்கி அன்பளிப்புச் செய்யுங்கள் என்று எல்லோரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு ஹாபிஸ் – மவ்லவி P.A. கஜா முஈனுத்தீன் பாகவி, தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை, பேராசிரியர் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம் அவர்கள் தனது அணிந்துரையில் இந்நூலைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.