அரசரிடமிருந்து ஒரே ஒருவர் தப்பிச் சென்று ரோம் ஆட்சியாளரிடம் உதவ
கோரினார். கிறிஸ்தவராக இருந்த ரோம் தேசத்து ஆட்சியாளர் நடந்த சம்பவங்கள்
யாவற்றையும் செவிமடுத்த பின்னர் "நாங்கள் யெமனில் இருந்து அதிக தொலைவில்
இருக்கிறோம். வேண்டுமென்றால் நஜ்ஜாஸி மன்னரிடம் உதவுமாறு கேட்டுக்
கொள்கிறேன்." என்று கூறி நஜ்ஜாஸி மன்னனுக்கு கடிதமொன்றை அனுப்பினார்.
நஜ்ஜாஸி மன்னரும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றக் கூடியவராக இருந்தார்.
"ஆர்யாத்"
என்ற ஒரு தளபதியின் தலைமையில் ஒரு படையை யெமன் நாட்டுக்கு நஜ்ஜாஸி மன்னன்
அனுப்பிவைத்தார். தூ நவாஸை ஆர்யாத் போரிலே தோற்கடித்தான். தோல்வியுற்ற
தூநவாஸ் செங்கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
யெமனின்
ஒரு பகுதியை அபீஸீனியர்கள் ஆட்சி செய்தார்கள். ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு யெமனை ஆர்யாத் ஆட்சி செய்தான். ஆர்யாதின் படைத்தளபதிகளில்
ஒருவரான 'ஆப்ரஹா' என்பவன் ஆர்யாத்திற்கு எதிராக சதிப்புரட்சி ஒன்றை
மேற்கொண்டதன் விளைவாக அபீஸீனியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர்.
இரண்டு குழுக்களிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
"நாமிருவரும்
ஒருவரையொருவர் கொன்றுவிட்டால் இந்த ஊர் மக்கள் மீண்டும் யெமனைக் கைப்பற்றி
விடுவர். அதனால் நாமிருவரும் நேருக்கு நேர் மோதி அதில் வெற்றி பெறுபவர்
ஆட்சி செய்து கொள்ளலாம்." என ஆர்யாத் ஆப்ரஹாவிடம் கூறினான்.
ஆர்யாத்
உயரமான மெல்லிய உடலமைப்பைக் கொண்டவன். அதே நேரம் ஆப்ரஹா குட்டையான பருமனான
உடலமைப்பைக் கொண்டவன். நேருக்கு நேர் இருவருக்கும் நடை பெறுகின்ற
மல்யுத்தத்திலே தான் தோற்பது போன்ற நிலைமை ஏற்பட்டால் ஆர்யாத்தைக் கொன்று
விடுவதற்காக தனது வீரர்களில் சிலரை இரகசியமாக ஆப்ரஹா ஏற்பாடு செய்தான்.
அவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதியபோது ஆர்யாத் உயரத்தில் இருந்து
அப்ரஹாவின் தலைமீது தாக்கி அவனது மூக்கையும் அறுத்துவிட்டான். இதனைக் கண்ட
ஆப்ரஹாவின் வீரர்கள் பாய்ந்து ஆர்யாத்தைக் கொலை செய்துவிட்டனர். யெமன்
முழுவதும் இப்போது ஆப்ரஹாவின் ஆட்சியின் கீழ் வந்தது. மக்கள் அனைவரும்
கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று ஆப்ரஹா விரும்பினான். அரபிகள்
கஃபதுள்ளாவை மிகவும் நேசித்ததால் அதைப் போன்று கஃபதுல்லாவிற்கு நிகரான
ஒன்றை யெமனில் நிர்மாணிக்கத் தீர்மானித்தான்.
"அல்
குல்லைஸ்" என அழைக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான ஒரு அழகிய தேவாலயம் ஒன்றை
ஆப்ரஹா யெமனிலே கட்டினான். கஃபதுல்லாவிற்கு போட்டியாகவே இந்தக் கட்டிடத்தை
ஆப்ரஹா நிர்மாணித்தான். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் இந்தக்
கட்டிடத்தின் புனிதத் தன்மையைக் கெடுப்பதற்காக தனது மலத்தை எடுத்து
கட்டிடச் சுவர்களில் பூசிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனைப் பார்த்து
ஆப்ரஹாவிற்கு கோபம் தலைக்கேறியது. கஃபதுல்லாவை அழித்துவிடுவதுதான் இதற்கான
தீர்வு என்று ஆப்ரஹா தீர்மானித்தான். மாபெரும் யானைப்படையைத் திரட்டிக்
கொண்டு மக்காவை நோக்கி வந்தான்.
வழியிலே ஒரு கோத்திரத்தின்
தலைவரான "நுபைல்" என்பவர் ஆப்ரஹாவை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் ஆப்ரஹா
தடையை முறியடித்து நுபைலையும் போர்க் கைதியாகக் கைப்பற்றினான்.
ஆப்ரஹா
தாயிப் நகரத்தை வந்தடைந்ததும் அவனது நோக்கத்திற்கு தாயிப் மக்கள் ஆதரவு
அளித்தனர். "அபூ ரகாதி" என்பவன் வழிகாட்டியாக ஆப்ரஹாவுடன் சென்றான்.
ஆப்ரஹாவின் படை தாயிப் நகரைத் தாண்டியதும் அபூ ரகாதி இறந்துவிட்டான்.
அபூ
ரகாதி இறந்த இடத்தில் அவனது சிலை ஒன்றை உருவாக்கி அந்த சிலைக்கு கல்லால்
எறிந்து வந்தனர். அவனது துரோகத்திற்காகவே அரபிகள் இதனைச் செய்தனர்.
ஆப்ரஹா
மக்காவின் புறநகர்ப் பகுதியை வந்தடைந்தான். அந்தப் பிரதேசங்களில்
மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த ஒட்டகங்களை ஆப்ரஹாவின் படையினர் கைப்பற்றி
ஓட்டிச் சென்றனர். இவை நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பாட்டன் அப்துல்
முத்தலிப்புடைய ஒட்டகங்களாகும். இதனைக் கேள்விப்பட்ட அப்துல் முத்தலிப்
ஆப்ரஹாவை சந்திக்க வந்தார். ஆப்ரஹாவினால் கைது செய்யப்பட்ட நுபைல் என்பவர்
அப்துல் முத்தலிபின் நெருங்கிய நண்பர். பயணத்தின் போது நுபைல் ஆப்ரஹாவின்
படையில் இருந்த உனைஸ் என்பவரை நண்பனாக்கினார். இந்த உனைஸ் என்பவரே
யானைப்படைக்கு பொறுப்பாக இருந்தார். அப்துல் முத்தலிப் ஆப்ரஹாவை சந்திக்க
வந்திருக்கிறார் என்பதை நுபைல் உனைஸிடம் தெரிவிக்க, அவர் ஆப்ரஹாவை அப்துல்
முத்தலிப் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முஹம்மத் நபி (ஸல்), முஹம்மத் ஹூஸைன் ஹைகல், குளச்சல் யூசுஃப், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru, முஹம்மத் ஹூஸைன் ஹைகல், குளச்சல் யூசுஃப் வாழ்க்கை வரலாறு, காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.