book

பாண்டிமாதேவி

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. பார்த்தசாரதி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :568
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

பாண்டி மாதேவி' என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர் விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் ஒன்றிப்போய்த் திளைத்திருந்த நேரம். நீலக்கண்ணாடிப் பாளங்கள் போல் அலை யெழும்பி மின்னி ஒசையிட்டுப் பரந்து தென்படும் கடலும், அதன் கரையும், காலை மேளமும் நாதசுவரமும், ஒலித்துக் கொண்டிருக்கும் குமரித் தெய்வத்தின் கோவிலும்-என் மனத்தில் பல்லாயிரம் எண்ணப் பூக்களை மலரச் செய்தன. இப்போது தென் கடலாக மாறிவிட்ட இந்த நீர்ப்பரப்பின் எங்கோ ஒரு பகுதியில் தமிழ் நாகரிகம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வீறெய்திய நினைவு தோன்றிற்று. குமரித் தெய்வம் குன்றா அழகுடன் கன்னிமைக் கோலம் பூண்டு நின்று தவம் செய்யும் தென்பாண்டிச் சீமையின் வரலாற்று வனப்புக்கள் எல்லாம் நினைவில் வந்து நீளப் பூத்தன. 'தென்பாண்டிநாடு', ‘புறத்தாய நாடு’ - 'நாஞ்சில் நாடு’ என்றெல்லாம் குறிக்கப்படும் வளம் வாய்ந்த நாட்டின் சூழலை ஒரு வரலாற்று நாவலில் புனைந்து போற்ற வேண்டுமென்ற ஆவல் அன்று அந்தக் காலை நேரத்தில் கன்னியாகுமரிக் கடற்கரையில் என் மனத்தில் எழுந்தது. அதன்பின் சிறிது காலம் அந்த ஆவல் நெஞ்சினுள்ளேயே கனிந்து, கனிந்து ஒரு சிறிய தவமாகவே மாறிவிட்டது. அந்தத் தவத்தோடு பல நூல்களைப் படித்தேன். பலமுறை தென் பாண்டி நாட்டு ஊர்களில் சுற்றினேன். மேலைச் சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும், படித்துக் கொண்டிருந்த காலங்களிலேயே எனக்கு வரலாற்று அழகுகளிலும், அவை தொடர்பான கற்பனைகளிலும் திளைக்கும் ஆர்வம் உண்டு. பின்பு இந்த ஆர்வம் வளர்ந்து பெரிதான காலத்தில் நண்பர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் இதை மேலும் வளர்த்தார்கள்.கன்னியாகுமரிக் கடற்கரையில் அன்று நான் கண்ட கனவுகள் நனவாகும்படி வாய்ப்பளித்து உற்சாகமூட்டியவர் கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்கள் ஆவார். 'பாண்டிமாதேவி-என்னும் இந்த வரலாற்று நாவலைக் கல்கியில் ஒராண்டுக் காலம் வரை வெளி வரச் செய்து ஊக்க மூட்டியவர் அவர்தாம். பேராசிரியர் கல்கி அவர்கள் தம்முடைய மாபெரும் சரித்திர நாவல்களால் அழகு படுத்திய இதழ் கல்கி. அந்த இதழில் பாண்டிமாதேவியும் வெளியாகி அழகு படுத்தினாள் என்பதை நினைக்கும்போது எனக்குப் பெருமையாயிருக்கிறது.