book

வள்ளுவர் கண்ட அறிவியல்

Valluvar kanda ariviyal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை சு.முத்து.
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :121
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

திருவள்ளுவப் பெருந்தகைக்குக் 'கவிஞர்' என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் 'அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் ஆகிறான்.

திருவள்ளுவர் கவிஞரா ?

திருவள்ளுவரைப் ‘புலவர் திருவள்ளுவர்’, ‘மன்புலவன் திருவள்ளுவன்', ‘முதற் பாவலர்’- எனப் புலவராகவும், பாவலராகவும் ‘மாலை’[1] சூட்டிப் போற்றினர். மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ‘பொய்யில் புலவன்’[2] என்றார். முந்தையோர் ‘கவிஞர்’ என்று பாடவில்லை.

கம்பருடனும், இளங்கோவுடனும் இணைத்துப் பாடிய நம் காலக் கவிமாமன்னன் பாரதி, ‘யாமறிந்த புலவரிலே’ என்று திருவள்ளுவரைப் புலவராகப் போற்றினார்.

ஆனால், அவரே,

“கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகா கவிகளுக்கு ஞாபகச் சின்னமும் வருசோற்சவமும் ஏற்பாடு செய்ய வேண்டும்”[3] என்று கட்டுரையில் 'கவி'யாகக் குறித்தார். பாரதிதான் திருவள்ளுவரைக் 'கவிஞர்' என்று குறித்த முதற் கவிஞர். அவ்வையாரையும் "கவியரசி" என்று போற்றினார்.

புலவர் புலமை உடையவர். புலமையால் பாடம் சொல்லும் ஆசிரியராகவும், எழுதும் ஆசிரியராகவும் விளங்குவார். முற்காலத்தில் எழுதும் புலமை "செய்யுள்' எழுதுவதாக இருந்தது. பின்னர் உரைநடையும் கூடிற்று. செய்யுளுக்குப் 'பா, பாட்டு' எனவும் பெயர். பாவைப் பாடுபவர், எழுதுபவர் பாவலர் எனப்படுவார்.

செய்யுளும் பாவும் பாட்டும் இலக்கணக் கட்டுக் கோப்புடன் அமைபவை. சீரான பலவகை ஓசைகள் உடையவை. ஆற்றுநீரில் மிதந்து செல்வது போன்று பாவின் பொருளை எளிமையாகக் கொள்ளலாம். எதிர்த்து நீந்துவது போன்று மூழ்கி வளப்பொருளை எடுப்பது போன்று முயன்றும் பொருள் கொள்ளலாம்.

'செய்யுள், பா, பாட்டு’ எனப்படுபவைதாம் 'கவிதை' எனப்படுவதும். கவிதை இலக்கண அமைப்பு உடையதே. பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனாரும் செய்யுள் இலக்கணம் வழுவாது எழுதினர். அவர்தம் செய்யுள்களும் பாக்களும் பாட்டும் 'பாரதியார்கவிதைகள்', 'பாரதிதாசன் கவிதைகள்’ எனக் கவிதைப்பெயரில் வழங்கப்படுகின்றன.

பொதுவான ஒரு கருத்து, 'செய்யுளைப் பாடுபவன் புலவன்; கவிதை எழுதுபவன் கவிஞன் என்பது. இதற்கு மாற்றாக ஓர் அமைதி சொல்வதுபோன்று திருஞானசம்பந்தர் "உரவார் கலையின் கவிதைப் புலவர்"[4] என்று "கவிதைப் புலவர்" என்னும் தொடரை வழங்கினார்.

ஒரு கருத்திற்குப் பழமைச்சொல்லும் இருக்கும். புதுமையாகச் சொல்லாக்கமும் அமையும். இவ்விரண்டையும் சங்க இலக்கியங்களிற் காணலாம்.