"அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே'
என்கிறார் ("மாமேகம் சரணம் வ்ரஜ' - பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு
உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும்
தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம்,
எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி முதலிய சிற்றிலக்கிய வகைமைகளையும்
செழுமையுறச் செய்தனர்.
ஸ்ரீமந்நாராயணனே முழுமுதற் கடவுள்; அவன்
எல்லாப் பொருள்களிலும் ஆன்மாவாய்-ஜீவ சாட்சியாய் இருந்து காத்து
வருகின்றான். அவனது பெருமை அளவிடற்கரியவை என்பதையும், எட்டெழுத்து
மந்திரத்தின் பெருமையையும், பிரேம பக்தியையும் (நாயக-நாயகி பாவம்), சரணாகதி
தத்துவத்தையும் எடுத்துரைக்கிறது திவ்யப் பிரபந்தம்.