ஒரு லட்சியத்தை வென்றடைய ஒருங்கிணைந்து செயல்படுகின்றவர்கள் தோழர்கள் (காம்ரேட்) என்று பெயர் பெறுகிறார்கள். கம்பராமாயணத்தில் ஏழைவேடன் குகனைத் தோழன் என்று அழைக்கிறான் இராமன். தோழமை உறவின் பெருமையை மார்க்ஸிய மேதை ஜீவா அவர்கள் மேடைதோறும் முழங்கினார். தோழர் என்ற இந்நாவலில் வருகின்ற பழநி முருகள் கதாபாத்திரம் நூலாசிரியர் தனுஷ்கோடி ராமசாமியின் சிந்தனைகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மு.வ. அவர்கள் தனது நாவல்களில் ஒரு பாத்திரமாக நின்று பேசுவதுபோல் ‘தோழர்’ நாவலில் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் நின்று பேசுகிறார். பொதுவுடைமைச் சித்தாந்தங்களை இந்நூலில் தெளிவாக விளக்குகிறார்.