அந்தப் பெயரே சற்று வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும்தான் இருக்கும். அது புனைப்பெயரில்லை. அவரே அப்படி வைத்துக் கொள்ளவும் இல்லை. நண்பர்களாகச் சேர்ந்து அவ்வாறு அமைத்து விட்டார்கள்.
ஜெ.கே. என்று கூப்பிட்டால் நமக்கே ஒரு கம்பீரம் வந்து விடும். அது அவருக்கே உரித்தானது. எல்லாவற்றிலும் அவர் தனிரகம்.
எல்லாரும் மாட்டிக் கொண்டு பார்க்கிற கற்பனைக் கண்ணாடியால் இந்த உலகத்தை அவர் பார்க்கவில்லை! யதார்த்தக் கண்களாலேயே அவர் கண்டார். அவர் கண்ட காட்சிகள் யதார்த்தமாக இருந்தாலும் உள்ளிருந்து எழுகிற அற்புதங்கள் என்ன அருமையானவை?
தனக்கு முன்னும் அப்படியொன்றில்லாத மரபினை அவர் தக்க வைத்துக் கொண்டார். அது காலத்தில் முகிழ்வில் கிடைத்த பொக்கிஷம்.
போயிற்று போயிற்று என்று பழமைவாதிகள் அடிவயிறு கிழியக் கத்திக் கொண்டிருந்த வேளையில், இருக்கிறது இருக்கிறது என யதார்த்த அணுகுமுறையால் தமிழர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்.