உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும் வாய்ப்பிருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துக்களையும் விற்று பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
சங்க இலக்கியங்களைப்பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா பெரும் காரணமாவார். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது.