அந்தக் காலனிக்கு காமதேவன் காலனி என்று என்ன காரணத்துக்காகப் பெயர் வைத்தார்கள் என்று தெரிய வில்லை. நந்தகுமாருக்கு ஒரு வீடு தேவைப்பட்டபோது, அந்தக் காலனியில் வீடு காலியிருப்பதாக யாரோ சொல்ல, வீடு தேடிப்புறப்பட்டுச் சென்றபோதுதான் முதன் முதலாக நந்தகுமார் அந்தக் காலனிக்கு அடியெடுத்து வைத்தார். அவன் ஒரு பிரம்மச்சாரி. சென்னை நகரத்தில் பிரம்மச்சாரி இளைஞர்களுக்கு வீடு கிடைப்பது எவ்வளவு சிரமம் என்று அவருக்குத் தெரியும்.