மனிதனை மாமனிதனாக்கும் பேராற்றல் இலக்கியங்களுக்கு உண்டு. இலக்கியங்களை பயில்வோர், அதனின்றும் மீண்டு வருவதற்கு விரும்பார். ஒரு தனிமனிதனுடைய வாழ்வின் இலட்சியத்தை இலகுவாக இயம்புவதே இலக்கியம். மனித சமூகத்தின் நாகரீகம், பண்பாடு, வாழ்வியல், வரலாறு போன்ற பலவற்றையும் பல்வேறு கோணங்களில் அறிவதற்கான நிலைக்களன்களாக விளங்குவன இலக்கியமே என்றால் அது மிகையாகா.
தொன்று தொட்டு தமிழ் மண்ணை வளம் செய்த பேராறுகள் இரண்டு. ஒன்று காவிரி மற்றொன்று தமிழ் இலக்கியங்கள். அகில் மணம் கொண்டு, நுரை பொங்கி பல நூறு ஆண்டுகளாய் கதிர் சிந்தி, மலர் உந்தி வருபவள் காவிரித் தாய் அன்றோ! இலக்கியத் தேனை ஆங்காங்கு இட்டு நடக்கும் இலக்கிய நங்கை. இங்ஙனம் ஓடிப்பெருக்கெடுத்து இலக்கிய மணியாற்றில் கூடிக் கலக்கும் சிற்றோடையாகச், சிந்தனைகளின் வெளிப்பாடாக,பலதரப்பட்ட ஆய்வு நோக்கில் மின்னலிடும் கருத்துக்களை சங்ககாலம், சங்கமருவிய காலம், இடைக்காலம், இக்காலம் என முறையாகக் கொண்டு தவழ்ந்து வரும் முப்பது கட்டுரைகளின் தொகுப்பே 'இலக்கிய இன்னமுதம்' என்ற பொருண்மையில் கெழுதகைச் சான்றோரின் ஆசியினால் உருவானது.
இந்நூலில் உள்ள கட்டுரைகள் கற்போர்களுக்கும், கற்பிப்போர்களுக்கும் பொருள் விளக்கிச் செல்லும். அறிவினை அகண்டமாக்கும். தமிழகம் மட்டுமல்லாது ஆழிசூழ் உலகமெங்கும் பயன்படக்கூடும் எனும் நம்பிக்கை. கட்டுரையை நுகர்ந்து கட்டுரைகளில் திளைப்போம்.