சின்னச் சின்ன சிற்றாடை கட்டி, பட்டுச் சிறகுச் சிட்டுகளைப் போல் உலாவு வதும், சிரிக்கச் சிரிக்கப் பேசுவதும், ஹெட் மிஸ்டிரஸ் அறையை எக்கிப் பார்த்து விட்டு பயந்து ஓடுவதுமாக இருந்த அந்தப் பள்ளி மாணவிகளைக் கண்டேன். 'இவர்களை இதுவரை யாரும் கதையில் கொண்டுவந்ததாகத் தெரியவில்லையே... புதுமையைத் தேடும் நான் ஏன் இவர்களைப் பயன் படுத்திக் கொள்ளக் கூடாது?' என்று எண்ணினேன். சம்பளம் கட்டியதும் திரும்பி ஒருமுறை பார்த்தேன்.
அவர்கள் தன் பாட்டுக்கு ஓடிவருவதும், தள்ளி விடுவதும், கிள்ளி விடுவ துமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிரித்துக் கொண்டே திரும்பினேன். அதைத் தொடர்ந்து பிறந்தயே இந்த 'வால்கள்'. அன்று எனக்கு உற்சாகத்தோடு கதை சொல்லித் தந்த அந்தப் பெண்களுக்குத்தான் முதலாவதாக நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். முகம் தெரியாத, அறிமுகமில்லாத வால்களே! உங்களுக்கு என் நன்றி.