முன்னுரையாக சொல்வதற்கு எதுவுமில்லை என்பதுதான் இந்தத் தொகுப்பின் தனித்துவம். பொதுத் தன்மை எதுவுமற்ற தனித்தன்மை கொண்ட படைப்புகளை உள்ளடக்கியது என்பதே இதன் தனிச் சிறப்பு தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கனதகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம் 'மின்சாரப்பூ ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். 'அன்பெழுத்து' வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமிதான். நான் சிகரெட் புகைக்கிற பழக்கத்தை விட்ட அனுபவம் கூட ஒரு சிறுகதைக்குரிய பாடு பொருளாகியிருக்கிறது. 'நீரில்லாமீன்' கதை தனித்துவமானது. சில்வறைக் கடைக்காரனாக இருந்து வாழ்கிற என்னால்தான், இந்த உள்ளடக்கத்தை கையாள முடியும். இந்த மாதிரியான அனுபவங்கள், மத்திய தர வர்க்கத்துப் படிப்பாளியாக இருந்து படைப்பாளியானவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பே இல்லை. தொகுப்புக்கான கதைகளை பாதுகாத்து வைத்து, சேகரித்து, சுத்தரித்து ஒழுங்குபடுத்தித் தந்த என் மூத்த மகள் வைகறைச் செல்விக்கும், என் இலக்கிய வாழ்வுக்கு ஆணி வேராகவும், ஆதார பலமாகவும் இருந்து வருகிற என் தம்பி கரிகாலனுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகும். வாசித்து முடித்து விட்டு மௌனத்தில் புதைத்து விட வேண்டாம். வாசித்ததால் நிகழ்ந்த உணர்வுகளை ஓர் அஞ்சலட்டையில் எழுதி, என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பாராட்டுப் பூக்கள் என்னை மேலும் உற்சாகப் படுத்தும்; அதேபோல் விமர்சனச் சொற்களும் என்னை நெறிப்படுத்தும். இரண்டுமே இலக்கியத்துக்கும், தமிழுக்கும் நல்லது.