தமிழ் இலக்கியப் பரப்பில் 'சிறுகதை' என்ற வடிவம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் தோன்ற ஆரம்பித்தது எனலாம். என்றாலும் சிறுகதை என்பது பண்டைக்காலத்தில் இருந்தே நம்மிடம் வழக்கில் இருந்திருக்கிறது. இதனை, ''பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளோடு புணர்ந்த நகைமொழி யானும் '' என்ற தொல்காப்பியக் குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம். பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி என்பதற்கு உண்மையல்லாத பொய்க்கதை, 'புனைகதை' என்பது பொருள். சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் சிறுகதை அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.