அடிப்படையில் கணித ஆசிரியராகப் பணியாற்றும் குமரி ஆதவன், தமிழ் இலக்கிய
உலகிற்குப் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். கவிதை, சிறுகதை, வரலாறு,
கட்டுரைகள், நாட்டுப் புறவியல் ஆய்வுகள் என பதினைந்துக்கும் மேற்பட்ட
நூல்களை படைத்தளித்துள்ளார். குமரி மாவட்ட விளையாட்டுகளைத் தொகுத்து 'குலை
குலை முந்திரிக்கா' என்ற நூலாகத் தந்த ஆதவன், தமிழக விளையாட்டுகளைத்
தொகுத்து முழுமையான நூலாகத் தற்போது நம் கரங்களில் தவழவிட்டிருக்கிறார்.
இதுவரைக்குமான இவரது நூல்களுள் ஆகச் சிறந்த நூலாக, நாம் போற்றிப்
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாக, 'தமிழகக் கிராமிய விளையாட்டுகள்' என்ற
பண்பாட்டுப் புதையலை தேடிக் கண்டு பிடித்து தமிழரின் சொத்தாகத்
தந்துள்ளார்.
சுமார் ஐந்து ஆண்டுகளைச் செலவழித்துத் தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களுக்கும் அவற்றின் குக்கிராமங்களுக்கும் சென்று, வயதில்
முதிர்ந்தோரையும், அனுபவத்தில் உயர்ந்தோரையும் சந்தித்து, அவர்களது இளமைக்
காலத்தைத் திரும்பிப் பார்க்க வைத்து, அவர்கள் விளையாடிய
விளையாட்டுகளையெல்லாம் சொல்ல வைத்து, அதை மிகச் சரியாக, விளையாடும்
முறைகளோடு பதிவு செய்ததோடு, அதற்குள்ளே மிகப்பெரிய ஆய்வையும்
மேற்கொண்டுள்ளார்.