ஏழாவது ஆண்டுப் பரீட்சை முடித்த கோடை விடுமுறை என்று நினைவு. வழக்கம்போல் வீட்டு வாசலில் வரிசையாக மாட்டு வண்டிகள் வந்து நின்றன. '' அய்ய் சூடு அடிக்கிறவங்க வந்தாச்சு'' அக்காவின் குரல் கேட்டு கொல்லைப்பக்கம் ஓடினேன். ஒவ்வொரு ஆண்டும் ஊருக்குள் இந்தக் குழு வருவார்கள். வீட்டிற்குப் பின்னால் பெரிய காலி இடம் இருக்கும் வீடுகள்தான் அவர்கள் தங்கும் இடம். அப்படித் தங்க இடம் தரும் வீட்டினரின் வயலுக்கு இலவசமாக சூடு அடித்துத் தருவார்கள்.