விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டு போகிறதோ, அந்த அளவுக்கு மனிதனின் வாழ்க்கையில் விரக்தியும் எற்பட்டுக்
கொண்டுதான் இருக்கிறது. மனிதனின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதே இத்தகைய விரக்திக்குக் காரணம். நம் முயற்சி முந்நூறு சதவீதம் இருந்தால் எதிர்பார்ப்பு இரண்டு சதவீதம்தான் இருக்க வேண்டும் என்று ஒரு அறிஞர் சொல்லி இருக்கிறார். இது நூற்றுக்கு நூறு உண்மையாகத்தான் இருக்கிறது. ஆனால் , மனித சுபாவம் எதிர்பார்ப்பு இல்லை என்றால் எதிலும் ஈடுபாடு என்பது குறைவாகத்தான் இருக்கும் என்பதுதான் நடைமுறை வாழ்க்கையில் நாம்காணக்கூடியதாக இருக்கிறது. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. இதை அவ்வப்போது நிவர்த்தி செய்து கொண்டு வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறிச் செல்ல இது போன்ற தன்னம்பிக்கை ஊட்டும் நூல்கள் நிச்சயம் உதவக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நூலாசிரியர் பல்வேறு அறிஞர் பெருமக்களின் கருத்துக்களோடு தனது கருத்துக்களையும் இணைத்து சங்கிலித் தொடராக தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களை இனிய ஓவியமாகத் தீட்டித் தந்திருக்கிறார். இது போன்ற தன்னம்பிக்கை ஊட்டும் நூல்களை நாங்கள் ஏற்கனவே வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் வெற்ற்றியின் திறவுகோல் என்ற இப்புத்தகமும் நிச்சயம் உங்கள் மனக் கதவைத் திறந்துவிட்டு முன்னேற்றப் பாதையில் உங்களை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறோம்.
-பதிப்பகத்தார்.