சுற்றுச் சூழல் பற்றிய ஞானம் இன்றையத் தேவையாகும். ஆண், பெண் சமத்துவத்திற்கு இந்த ஞானம் மிக அவசியமான ஒன்று. ஆணும், பெண்ணும் இணைந்து இந்த ஞானத்தோடு செயல்படும் பொழுதுதான் இயற்கை நமக்கு உதவுகிறது. இல்லையெனில் அதுவே நமக்கு எமனாகிறது. குறிப்பாக பெண்களை கடுமையாகத் தாக்குகிறது. இன்று சுற்றுப்புற சூழல் பற்றி இரண்டு விதமான பார்வைகள் மோதுகின்றன. ஒரு சாரார் கூறுகின்றனர். மனிதன் அறிவியல் தொழில் நுட்பத்தால் இயற்கையை கெடுக்கிறான். இயற்கையை மாற்றுகிற எந்த நடவடிக்கையிலும் மனித சமூகம் ஈடுபடக் கூடாது என்கின்றனர். இவர்களை சுற்றுப்புறச் சூழல்வாதிகள் என அழைப்பர். இன்னொரு சாரார் இது தவறு, மானுட அறிவியல் வளர்ச்சியால் தான் இயற்கையை பாதுகாக்க முடியும், புதிய புதிய தொழில்நுட்பங்களால் மட்டுமே மானுடமும், இயற்கையும் அழியாமல் பாதுகாத்திட முடியும்.