அண்மையில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் நண்பர் அ.முத்துக் கிருஷ்ணனை அவர் இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது. அன்றைய மாலையில் மக்கள் திரள் பெருகி ஓடிக் கொண்டிருக்கும் மதுரைவீதி நடுவே அவர் மாலை தோறும் சந்தித்து உரையாடும் நண்பர் ஒருவரை நானும் அவரோடு சந்தித்தேன். அவர் எனது கவிதைகளை நிறைய வாசித்திருப்பது தெரிந்தது. அவை குறித்து நிறைய என்னிடம் பகிர்ந்து கொண்டார். எனது கவிதைகள் பெரும்பாலும் இயற்கைமீதான அனுபவங்களாகவே உள்ளனவே என்பதையே தனைமறந்த நிலையில் திரும்பத் திரும்ப அவர் கூறினார். அவர் ஒவ்வொருமுறை அதைக் கூறும் போதும் அதை நான் முற்றிலும் அறியாதவன் போலும், அய்யுறுபவன் போலும் அப்படியா எனும் மிகத் தாழ்ந்த ஒரு குரலை உதிர்ப்பவனாகவே இருந்தேன். இது எனது வாழ்க்கையில் பலமுறையும் இப்படித்தான் நடந்திருக்கிறது.