அன்னை - தந்தை பெற்ற சிற்றின்பத்தில் பிறந்த குழந்தை நூறாண்டு ஆயுள் பெறுகிறது. நூறாண்டு வாழ்நாள் பெறும் ஒரு மகனைப் பெற அன்னையும் தந்தையும் ஆண்டுக் கணக்கில் தவம் செய்வதில்லை. ஆனால் இவனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ என்று வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வள்ளுவர் பெருமான் வழிப்படுத்துகிறார்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவர் வாழ்க்கைப் பாதை அமைத்துக் காட்டுகிறார். அந்தப் பாதையை அடியொற்றி நல்ல அறக் கருத்துக்களையும், அனுபவக் கருத்துக்களையும் அழகுற எடுத்துக் கூறி '' நிறைவாக வாழுங்கள்'' என்று ஆற்றுப் படுத்துகிறார்.
செய்யுளில் துள்ளலோசை அழகு செய்வது போல் இந்நூலின் உரையாடல் துள்ளிநடையில் அமைந்துள்ளது. இந்நூல் படிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப்பி, உற்சாகம் ஊட்டி, வாழ்வில் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெற வழி வகுக்கிறது.