பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம். சறுக்கிவிடாமல் கத்தி மேல் நடப்பது போன்றதான இந்தச் சவாலை எந்த சாமர்த்தியங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாகத் தன் நேர்மையான எழுத்தினால் கடந்திருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன். எழுத்து நடை நம்மைக் களத்தில் கொண்டு நிறுத்துவதற்கும், கதாபாத்திரங்களின் தன்மை எந்தப் பாதிப்பும் அடையாததற்கும் காரணம், ஆசிரியர் மனதால் அந்தக் காலக் கட்டத்துக்குள் பயணப்பட்டிருப்பதும் அந்தக் கதாபாத்திரங் களாகவே மாறி உணர்ந்து எழுதியிருப்பதுமே.
பல தலைமுறைகளாகப் பல வடிவங்களில் மக்களுக்குச் சென்றபடியே இருக்கின்றன இதிகாசங்கள். ஒரு பாத்திரத்தின் அந்நேரத்தைய செயல்களை விவரிக்கும், விமர்சிக்கும் போக்கினில் அவற்றின் முழுமையான குணாதிசயங்களை ஒரு சில பேர் சொல்லத் தவறி விடுவதால் பல மகாபாரத, இராமாயணக் கதாபாத்திரங்கள் தவறான சித்தரிப்புகளுடன் வலம் வந்தபடியும் இருக்கின்றன. அந்தப் பிழையைக் கவனமாகத் தவிர்த்திருப்பதுடன் எடுத்துக் கொண்ட கருவினில் மட்டுமே கவனத்தைச் செலுத்தாமல் எதிர்மறையாகவே நாம் பார்க்கின்ற பாத்திரங்களின் நல்ல பக்கத்தையும் வாய்ப்பு வரும் போது காட்டத் தவறவில்லை ஆசிரியர்.