“காதற்ற
ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே'' என்னும் ஒரு சொற்றொடரையும், இது
பட்டினத்தார் துறவு மேற்கொள்ள உதவியது என்பதையும், அறியாத எவரும்
தமிழகத்தில் இருக்கமுடியாது. ஆனால் இதனைக் கண்ணுற்ற அளவில்
பட்டினத்தாருக்கு ஞானம் பிறந்தது போல நமக்கு ஞானம் பிறக்கவில்லை என்பதை
மட்டும் நம்மால் அறிய முடிகிறது. எனவே, இது குறித்து மேலும் ஒரு விசாரணை
தேவை என்பதை அறிந்து, அவரது திருப்பாடல் திரட்டுக்கு உள்ளும், அவரது சீடர்
பத்திரகிரி யாரது மெய்ஞ்ஞானப் புலம்பலுக்கு உள்ளும் பயணிக்கவேண்டும் என்று
முடிவாற்றினோம். அதன்படி மேற்கொண்ட பயணத்தில் பெற்ற சாட்டை அடிகள் ஏராளம்;
நீங்களும் அந்த அடிகளைத் தாங்கிக் கொள்ளத் தயாராகுங்கள்; புறப்படுங்கள்;
பயணிக்கலாம்; பயன்பெறலாம்.