book

நெஞ்சிருக்கும் வரைக்கும்

Nenjirukkum Varaikkum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :9
Published on :2011
Add to Cart

“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்”வைக்க வேண்டும் என்று ஒரு பழைய பாட்டில் வரும். அதுபோல, என்னதான் நந்தகுமாருடன் பழகுவது இனிமையாக இருந்தபோதும், அவனைப் பழிவாங்கும் எண்ணத்தை மட்டும் மேகலை சற்றும் விட்டுவிடவில்லை. அவ்வப்போது அந்த எண்ணத்தில் சற்று தொய்வு கண்டாலும் பிடிவாதமாய் அந்தப் பதினாலு வயது வேதனைகளை எண்ணிப் பார்த்து, மீண்டும் அதைத் தீவிரப்படுத்திக் கொள்வாள். தன் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக இப்போது அவள் செய்ய வேண்டிய முதல் வேலையாக நந்தகுமாரனின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டியிருந்தது. வேலையைப் பொறுத்தவரையில், அவள் இப்போது செய்யும் அளவிலேயே நந்தகுமாரனுக்கு முழுமையான திருப்திதான் என்றாலும், அதிகப்படி வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு பார்த்தாள். பல ஆண்டு முந்தைய ஃபைல்களை எல்லாம்கூட எடுத்து வந்து, ஃப்ளாப்பியில் 'ஸ்டோர்' பண்ணி வைத்தாள். பொது 'செக்ஷனுக்குப் போய் மற்றவர்களுக்கு உதவி செய்து, பலரையும் நட்பினராக்கிக் கொண்டாள். பிறகு அவரவர் செய்த சிறு குற்றங்களையும் வேவு பார்த்து வந்து அவனிடம் தெரிவித்தாள் வத்தி வைத்தாள் எனலாம். நந்தகுமாரன் அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாததோடு, போலீஸ்காரர் போலத் தன்னைப் பாவித்து விளையாடும் குழந்தையைப் பார்க்கும் ரசனைப் பார்வையை அவள் மீது செலுத்தினான். “என்ன சார், நீங்கள்? நிறுவனத்தில் திருட்டுப் போவது பற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நீங்களானால் சிரிக்கிறீர்களே! என்று குறைப்பட்டாள் மேகலை. உள்ளூர அவளுக்கு இந்தப் புறம்கூறல் மிகுந்த வேதனைதான். நம்பியவர்கள் முதுகில் குத்த வேண்டியிருக்கிறதே என்று எண்ணிக் குன்றிப் போயிருந்தாள். இதுவே நந்தகுமாரன் என்றால் அது விஷயமே வேறு! அங்கே நியாய அநியாயம் பார்க்கத் தேவையில்லை! ஆனால்... இது... அவனது முறுவல் மறைவதாகவே இல்லை. ஆனால் அவளுக்கும் பொறுமையுடனேயே விளக்கம் உரைத்தான்.“பாரம்மா, இங்கே பணிபுரிவோர், அவ்வப்போது இரண்டு பென்சில், பால்பென், அழிரப்பர் என்று எடுத்துப் போவதால் நம் நிறுவனத்துக்குப் பெரிய நஷ்டம் எதுவும் ஏற்பட்டு விடாது. அதேசமயம், வீட்டில் 'ஙைவை' என்று அரிக்கும் பிள்ளைகளிடம் அவ்வப்போது இவற்றை எடுத்து நீட்டுவதால் குடும்பத்தில் ஹீரோ மரியாதை கிடைக்கும். அந்த மகிழ்ச்சியில் இங்கும் வேலை நன்றாகவே நடக்கும். அதனால்தான் இந்தச் சில்லறைத் திருட்டுகளை திருட்டு என்று சொல்வதற்கில்லை. இந்தக் கையாடல்களை நான் பொருட்படுத்துவது இல்லை.”என்றான். “ஆனால்... ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடிக்க வந்த கதைமாதிரி, இந்தச் சில்லறைச் சாமான்களிலிருந்து பணம், பொருள் என்று பெரிய அளவுக்கு வந்துவிட்டால்?”தன் முக்கியத்துவத்தை நிலை நாட்டாமல் விட மனமின்றி மேகலை விவாதித்தாள். “அதற்கு வாய்ப்பு கிடையாதம்மா. அதனால் இந்த அழகான தலைக்குள் இந்த உப்புப் பெறாத விஷயங்களைப் போட்டு அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாய் இரு”என்று நந்தகுமார் முடித்து விடவே, அவளால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. பேசிப் பயனும் இல்லாதபோது, அதைப் பற்றிப் பேசித் தான் என்ன லாபம்? இவனை அணுக வேறு வழி தேட வேண்டும். இப்போதே பாரம்மா, கேளம்மா என்று 'அம்மா' போட்டுப் பேசுவதும், பல நுணுக்கமான வேலைமுறைகள் பற்றி தடையின்றிக் கலந்து ஆலோசிப்பதுமாக அவளிடம் கொஞ்சம் - நெருக்கமாகத்தான் நடந்து வந்தான். ஆனால், மேகலைக்கு அது போதாது. நந்தகுமாரனுக்கு அவள் இன்றியமையாதவளாக ஆக வேண்டும். தன்னைப் போலவே அவளையும் கருதி, வேறுபாடின்றி, அவன் அவளிடம் எல்லாவற்றையும் ஒளிவு மறைவற்று ஒப்பிக்க வேண்டும்! எனவே, மேகலை இன்னொரு வழியில் முயற்சி செய்தாள்.