சென்னையிலிருந்து 200 கிலோமீட்டருக்கும் அப்பால் உள்ள திருவண்ணாமலை என்ற மாவட்டத் தலைநகரில் உள்ளடங்கிய சாரோன் பகுதியில் படித்துக் கொண்டும் எப்போதாவது எழுதிக் கொண்டும் வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த என்னையும் பவாவையும் பதிப்பகம் ஆரம்பிக்க வைத்து தொடர்ந்து இதிலேயே உழல வைத்தவர்கள் நண்பர்கள் சி.மோகனும், ஜி. திலகவதியும் தான்.
கையில் ஒத்தை ரூபாயும் இல்லாமலிருந்த அப்போது, ஐம்பதாயிரத்தைத் தந்து இதன் வாசலை திறந்து வைத்த ஒரு ஆத்மார்த்த நண்பரை இவ்விநாடி நன்றியுடன் நினைக்கத் தோன்றுகிறது.
நல்லப் புத்தகங்களை மட்டுமேப் பதிப்பிப்பது என்ற பிடிவாதங்கள் சில சமயங்களில் தகர்ந்து போனதற்கு நண்பர்களின் அன்பும் பிடிவாதமும் மட்டுமே காரணம்.
எங்களை இப்படி மாட்டிவிட்ட ஸ்நேகிதி திலகவதியே இதை திறந்தும் வைத்தார்கள்.
ஒரு போதும் வம்சி புக்ஸ் எங்கள் தொழிலாக மாறிவிடக் கூடாது என்ற பிடிவாதத்திலிருக்கிறோம்.
நண்பர்கள் கூடவும், சந்திக்கவும், புத்தகம் படிக்கவும், வாங்கவும், சில நேரங்களில் எடுத்து போகவுமான சுதந்திர வெளியாக இது கடைசிவரை நிலைக்க வேண்டும்.
முப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து எங்கள் கலாச்சார செயல்பாடுகளில் ''வம்சி புக்ஸ்'' சும் ஒன்று.
இந்த இணைய தளத்திற்காக தேடிய போது தான் 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை பதிப்பித்திருக்கிறோம் என்பது தெரிந்தது. இது எங்களை எங்களாலேயே நம்ப முடியாத பேரதிரிச்சியாக உள்ளது. இச்சாத்தியத்திற்கு பட்டிற்கும் கடனும், செலுத்தும் வட்டியையும் கணக்கிட்டால் இருக்கும் கொஞ்சமே கொஞ்மான கலா உணர்வும் செத்துப்போகும்.
இது வளர்ந்துப் பெருகி, நிறுவனமாகி...... அதெல்லாம் வேண்டாம்.
இன்னொருப் பேராசை மட்டும் உன்டெனக்கு,
திருவண்ணாமலைக்கருகில் எங்களுக்கிருக்கும் காணி நிலத்தில் இப்பதிப்பக அலுவலகம்,
இலக்கிய கூட்ட அரங்கு, ஒரு சின்ன திறந்த வெளி திரைப்பட அரங்கு,
எழுத்தாளர்கள் வந்தால் தங்கிக் கொள்ளும் வசதி.....
''கனவு மெய்ப்பட வேண்டும்.
மெய்ப்படும்.''