சட்டென கண் விழிப்பு வந்து விட்டது கோபுவுக்கு! புரண்டு படுத்தான் தூக்கம் தொடர மறுத்தது.வலுக்கட்டாயமாக கண்களை மூடி தூங்க முயற்சி செய்தான், பலன் பூஜ்யம்தான்.இதற்கு மேல் படுப்பதில் லாபமில்லை, மெல்ல எழுந்தவன் நடந்து சென்று விளக்கை எரிய விட்டு சுவர் கடிகாரத்தை பார்க்க மணி மூன்றை காட்டியது. விடிய நேரமிருக்கிறது.தூக்கம் வந்தால் இன்னும் மூன்று மணி நேரம் தூங்கலாம் என எண்ணியவன் கொஞ்சம் காற்றாட வெளியில் நிற்போம் என நினைத்து அறைக்கதவை திறந்து வெளியே வந்தவன் அந்த ஜில் என்ற குளிர்ந்த காற்றை மூச்சை இழுத்து அனுபவித்தான்..
கோபு இருந்த அறை ரோட்டை ஒட்டி அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தில் இருந்தது.எல்லா அறைகளும் ரோட்டை பார்த்தே வாசல் அமைக்கப்பட்டிருந்த்து. அங்கு இவனைப்போலவே நிறைய பிரம்மச்சாரிகள் பக்கத்து பக்கத்து அறைகளில் தங்கி இருந்தனர். ஒவ்வொரு அறையும் ஒரு ஹால்,கிச்சன், மற்றும் அட்டாச் பாத்ரூம் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த்து.இப்படிப்பட்ட வசதிகளுடன் இந்த ஆர்.எஸ்.புரத்தில் இவனுக்கு இப்படி ஒரு அறை கிடைத்தது மிகவும் வசதியாக இருந்தது. இவன் அடிக்கடி சொந்த ஊரான ஈரோட்டுக்கு எந்த நேரமானாலும் சென்று எந்த நேரமானாலும் திரும்பி வர வசதியாக இருந்தது.ஒரு கம்பெனியில் நல்ல பதவி, மற்றும் நல்ல சம்பளத்துடன் இருந்த்தால் வாடகை கொடுக்கவும் கட்டுப்படியானது.
ஜில்லென்ற காற்றை அனுபவித்தவன் கீழே குனிந்து ரோட்டை பார்க்க, அது கரும் மலை பாம்பு போலநீளமாக படுத்திருப்பது போல் தோன்றியது. காலை முதல் இரவு வரை பரபரப்பாய் காணப்படும் அந்த சாலை ஓய்வெடுத்து கிடப்பது போலவும் அவனுக்கு தோன்றியது.