தென்னிந்திய அரச குலங்கள், தங்கள் பேரரசின் நிலவிரிவாக்கத்திற்கு ஒன்றுடன் ஒன்று எப்போதும் போரிட்டுக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு, குறிப்பாக வடநாட்டு இசுலாமிய படைகளுடனும் எதிர்த்து நின்றது.
தென்னிந்திய பேரரசுகளில், விஜயநகரப் பேரரசு, வட இந்தியா இசுலாமிய முகலாயர்களின் தாக்குதல்களை முடியறிடித்து, தென்னிந்தியாவிற்கு அரண் ஆக விளங்கியது.
கிபி 16ம் நூற்றாண்டில், வணிக நோக்கில் தென்னிந்தியாவில் காலூன்றிய ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பெனிகள், தென்னிந்திய மன்னர்களின் ஒற்றுமையின்மைக் கண்டு, தென்னிந்தியாவைக் கைப்பற்ற தங்களுக்குள் போட்டியிட்டனர். இப்போட்டியில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி சென்னை மாகாணத்தை நிறுவினர். பிரித்தானியர்களின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட, தென்னிந்திய சுதேச சமஸ்தான மன்னர்கள், ஆங்கிலேயர்களுக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்திக் கொண்டு தங்கள் பகுதிகளை ஆண்டனர். தென்னிந்தியாவின் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகள் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினர் ஆண்டனர்.