உங்கள் நிதி வாழ்க்கையை சீரமைக்க ஓராண்டு போதுமென ஊக்கம் அளிக்கிறார், அமெரிக்க நிதி திட்டமிடல் வழிகாட்டியான ரெஜினா லீட்ஸ். இவர், ரஸல் வைல்டு எனும் நிதி திட்டமிடல் வல்லுனருடன் இணைந்து எழுதியுள்ள, 'ஒன் இயர் டு அன் ஆர்கனைஸ்டு பைனான்சியல் லைப்' புத்தகத்தில் இதற்கான வழிகளை விவரித்துள்ளார்.
மிகவும் சுவாரஸ்யமான முறையில், நிதி திட்டமிடலுக்கான பாதையை, ஜனவரி முதல், டிசம்பர் மாதம் வரை, படிப்படியாக மேற்கொள்ளவேண்டிய செயல்களாக அவர் விவரிக்கிறார். ஒவ்வொரு மாதமும் கடைபிடிக்க வேண்டிய புதிய பழக்கத்தையும் அடையாளம் காட்டுகிறார்:* பணம் தன்னளவில் நல்லதோ, கெட்டதோ இல்லை. சரியான முறையில், புத்திசாலித்தனமாக கையாண்டால், அது நம் வாழ்க்கையில் நலனை உண்டாக்கும். நிதி வாழ்க்கையில் எளிமை மற்றும் தெளிவை கொண்டு வந்து, ஒழுங்குபடுத்துவதன் மூலம், வாழ்க்கையின் சவால்களை மீறி பாதுகாப்பை பெற முடியும்.