முனைவர் இரா.சந்திரசேகரன்
தேவாரத் திருப்பதிகப் பாடல்களின் எண்ணிக்கையை நோக்கும்பொழுது ஒன்பதாம் திருமுறையில் உள்ள பாடல் களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் ஒன்பதாம் திருமுறையாசிரியர்கள் சமயக்குரவர்களின் வழியைப் பின்பற்றி உள்ளனர் என்பது இத்திருப்பதிகப் பாடல்களின் பல்வேறு கருத்தாழத்தைக் காணும்போது தெரிகிறது. பன்னிரு திருமுறைகளையும் பல்வேறு நோக்கில் திறனாய்வாளர்கள் ஆராந்து அதில் உள்ள உண்மைகளை அறிவுறுத்தி உள்ளனர். ஒன்பதாம் திருமுறையானது பெரும்பாலும் தொகுப்பு நூலாகத்தான் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இத்திருமுறையில் ஆய்வுகளும் அதிக அளவில் நடைபெறவில்லை. முழுமையான உரைப் பதிப்பும் தனியாக இந்நூலுக்கு என்று மிகுதியான அளவில் வெளிவரவில்லை. ஆகவே இத்திருமுறையில் காணப்படும் கருத்துக்களையும் இலக்கிய வளத்தையும், சமயக் கருத்துக்களையும் சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் அறியும் நோக்கத்தில் இந்நூல் அமைகிறது.