கௌரியம்மையார் சிவபெருமானை நோக்கி, ‘தாண்டவ வகை எத்தனை? அவை யாவை? அவற்றின் வரலாறு என்ன? விளங்கக் கூற வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள, பெருமான் அம்மையாருக்கு அவற்றை விளக்கமாகக் கூறுகிறார். ஏழு தாண்டவத்தையும் ஏழு இசையுடன் பொருத்திச் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் எழுவகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறுகிறார். இவ்வாறு ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளி தாண்டவம், முனி தாண்டவம், சங்கார தாண்டவம் என எழு தாண்டவங்களின் பெயர்கள் கூறப்பட்டன. மேலும் இந்தத் தாண்டவங்களை எந்தெந்த இடங்களில் செய்தருளினார் என்பதையும் கூறுகிறது.
தில்லைப் பொன்னம்பலத்திலே ஆனந்தத் தாண்டவத்தையும், மதுரை வெள்ளியம்பலத்திலே சந்தியா தாண்டவத்தையும், பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ச் சிற்சபையிலே கௌரி தாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச் சித்திரச்சபையிலே திரிபுர தாண்டவத்தையும், திருவாலங்காட்டு இரத்தின சபையிலே காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி தாம்பிர சபையிலே முனிதாண்டவத்தையும், இருண்ட நள்ளிரவிலே சங்கார தாண்டவத்தையும் இறைவன் செய்தருளுகிறார் என்று புராணம் கூறுகிறது.இதனால் ஐஞ்செயல்களின் பொருட்டுச் செய்யப்படும் தாண்டவங்கள் ஏழு என்பதை அறிகின்றோம்.