வெகுமக்களால் பின்பற்றப்படும் பண்டிகைகள். திருவிழாக்கள். வழிபாடுகள் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் இந்நூல், அவற்றின் அடியோட்டமாக நீத்தார் நினைவு கூரல்கள் இருப்பதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அவற்றை ஒட்டி சடங்குகள், கதைகள், நம்பிக்கைகள் ஆகியவை பல்வேறு ஊடாட்டங்கள் வழியாக உருவாகி பண்பாட்டு உளவியலாக மாறிப் போயிருப்பதை விவரிக்கிறது. தொன்மையை பேசுவது போல் தொடங்கும் இந்நூலின் வாதங்களை படித்து முடிக்கும் போது சமகாலத்தையும் சேர்த்தே வாசிப்பவர்களாக நாம் மாறிப்போவதைப் பார்க்கலாம். இத்துணை நுட்பங்களை கொண்ட பண்பாட்டு நடைமுறைகளோடு நாமெல்லாம் கண்ணுக்கு தெரியாத விதத்தில் புழங்கிக் கொண்டிருக்கிறோமா? என்கிற வியப்பினை இந்நூல் நிச்சயம் எழுப்பும்.
பண்பாட்டு அம்சங்களுக்கிருக்கும் அதீதம், எளிமை என்னும் எதிர்மறைகளுக்குள் சிக்கி விடாமல் நிதானமாக அணுகுவது இந்நூலின் பெரும் பலம். பெரும் பொருளை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் போது இடையிடையே திறந்து வழிகாட்டும் சாளரங்கள் போல புதிய ஆய்வு பாதைகள் இந்நூலில் கிடைக்கின்றன. பெருமளவு களத்தரவுகளைச் சார்ந்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல், அவற்றை புரிந்து கொள்வதற்குரிய புதிய ஆய்வு அணுகுமுறையையும் முன்மொழிந்திருக்கிறது.
தமிழில் அரசியல் விமர்சகராகவும் வரலாற்று ஆய்வாளராகவும் அறியப்பட்ட ஸ்டாலின் ராஜாங்கம் (1960) எழுதிய முழுமுற்றான பண்பாட்டு ஆய்வு நூல் இது. மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார் ஸ்டாலின்.