கேரளத்தின் ஓர் உட்கிராமத்தில் நடைபெறும் கதை. அப்பகுதியைப் பற்றிய வர்ணனையும் மக்களைப்பற்றிய வெளிப்பாடும் இந்துமுஸ்லீம் என இனவேறுபாடு இல்லாமல் வாழும் வாழ்க்கையும் இந்த நாவலில் திறம்பட வெளிப்படுகிறது. பாரம்பரியத்தில் மூழ்கிய சங்கிலிகளைத் தகர்த்தும் சுதந்திரமற்ற தன்மையிலிருந்து தப்பிக்க முடியாமல் பதறும் ரவி, வாழ்க்கையின் மென்மையற்ற யதார்த்தங்களுக்கு முன்னால் கோழையாகி உடலாலும் உயிராலும் முடிவைத்தேடும் சுரேகா, துளசிக் கதிரைப் போல் பரிசுத்தமுள்ள அம்பிகா, பெண்மையின் எல்லா அழகுத் தன்மையோடும் பலவீனங்களோடும் கூடிய சியாமளா அண்ணி, ஒரு போதும் காட்சிக்குவராத ஜயந்தி பெர்ணான்டஸ் என இவர்களெல்லாருமே இந்த நாவலின் தனித்தன்மையுள்ள-தெளிவடைந்த கதாபாத்திரங்களாவர். இந்நாவல் முழுமையிலும் மிளிரும் கிராமீய அழகைமயக்கும் தன்மையிலான உரையாடல்களையும் கதைப்போக்கையும் அமைத்து, முள்பாதையில் நடப்பது போல் நாவலாசிரியர் நகர்த்தியுள்ளார் என்னும் சிறப்பாலேயே, 'சிதைந்த சிற்பங்கள்' மலையாள குங்குமம்இதழின் போட்டியில் ரூ.11111/- முதல்பரிசை 1987லேயே பெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.