'சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக' என்பது தலைப்பு. 'சிலருக்காக' என்று வைத்ததில் எனக்குச் சம்மதமில்லைதான். காரணம், வயிற்றுக் குழந்தைக்காகத் தாய் வாஞ்சையோடு சாப்பிடலாம். அது தவழுகிறபோதும், தத்தி நடக்கிற போதும் சாப்பிடாமல் பத்தியம் இருக்கலாம். இருந்தாலும், 'தாய்' க்காகப் பிள்ளை இல்லை பிள்ளைக்காகத் 'தாய்' எப்போதும் சிந்திக்க இயலாது-கூடாது. ஒருவருக்குப் பதிலாக மற்றொருவர் சிந்திப்பது உதவாது. அதிலும் இலட்சக் கணக்கான மனிதர்களுக்காக இரண்டுமூன்று பேர்கள் சிந்திப்பது சிந்தனைச் சர்வாதிகாரம்! எல்லோரும் சிந்திக்கிற நாளே என் நாடு விடியலைக் காணப்போகிற வினோத திருநாள். இதில் எனது சில சிந்தனைகளுக்கு சிறகு முளைத்திருக்கிறது.