வீட்டின் வாயில் கதவு தொடங்கி, சமையல் அறை பாத்திரங்கள் வரை... தலை சீவும் சீப்பில் ஆரம்பித்து தங்க நகைகள் வரை... நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களைப் பழுதில்லாமல் பராமரித்து, பளிச்சென்று மினுமினுக்க வைக்க, மிகவும் பயனுள்ள 300 குறிப்புகளை அளித்திருக்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். சிலர், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து, டென்ஷனையும் வரவழைத்துக் கொள்வார்கள். வீட்டுச் சுவரில் ஆணி அடித்த துவாரம்... மொசைக் தரையில் எண்ணெய் கறை... இதற்கெல்லாம் சிலர் பெயின்டரைத் தேடுவார்கள். ஃபிரிட்ஜில் ஐஸ் கூடிவிட்டால் உடனே எலக்ட்ரீஷியனுக்குப் போன் போடுவார்கள். சிலர், மிக்ஸி, கேஸ் ஸ்டவ் போன்றவற்றை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் ரிப்பேர் ஆக்கி விடுவார்கள். இதற்கெல்லாம் தீர்வு சொல்ல இந்த ‘வீட்டு பராமரிப்பு’ டிப்ஸ் பயன்படும். இந்த நூலைப் படித்துவிட்டு, நாமே ஒரு நாற்காலியை ரிப்பேர் செய்யத் தொடங்கிவிட்டால், ‘அட... ரொம்ப சிம்பிளான தெரிந்த விஷயம்தானே... இதுக்குப் போயா இத்தனை நாள் கஷ்டப்பட்டோம்!’ என்று நினைக்கத் தோன்றும். அந்த அளவுக்கு இந்தப் புத்தகத்தில் வீட்டு உபயோகப் பொருட்களை பராமரிக்கும் எளிமையான விஷயங்கள், அனைவருக்கும் புரியும் விதமாக விளக்கப் பட்டிருக்கிறது. இந்த யோசனைகளை உடனுக்குடன் செயல்படுத்திவிட்டால், நாம் அன்றாடம் உபயோகிக்கும் வீட்டுப் பொருட்கள் தேய்மானம் ஆகாமலும், உடையாமலும், கெட்டுப் போகாமலும், நிறம் மங்காமலும் பராமரிப்பது மிகமிக எளிது. இந்த நூலைப் படித்துப் பயன்பெற்று, வீட்டைப் பாதுகாப்பது போல, இந்த நூலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று!